வைனாகரம் சு. சண்முகனார்

  • “நாட்டுக் கோட்டையாரும் சீர்திருத்தமும்” என்று 1930இல் இவர் எழுதிய கட்டுரை சுவையானது. இப்போது இயக்கத்தால் வெளியிடப்பட்டுவரும் “ஞான சூரியன்” எனும் அரிய அறிவு நூலை முதன் முதலாக இவரே வெளியிட்டார்.
  • 1961ஆம் ஆண்டில் இவர் இயற்கையெய்தியபோதுகூட இவரது உறவினர்கள் இறுதி நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள முன்வரவில்லை! இயக்கத் தோழர்களே இவரது உடலுக்குச் சுடுகாட்டில் எரிமூட்டிக் கடமையாற்றினர்.
வைனாகரம் சு. சண்முகனார்

முகவை மாவட்டம் கானாடுகாத்தானில், 1883ஆம் ஆண்டில், பிறந்த வை.சு. சண்முகம் அவர்கள், காங்கிரசில் இருந்தபோதே சேரன்மாதேவியில் நடந்த குருகுலப் போராட்டத்தில் அய்யாவுக்குப் பெரும் ஒத்துழைப்பு நல்கிய “பார்ப்பனரல்லாதார்” உணர்வு நிரம்பியவராகையால், வகுப்புரிமை எய்த வஞ்சினம் கூறித் தமிழர் தலைவர் சுயமரியாதை இயக்கம் அமைக்கையில் இவரும் உடன் தோழராய்த் தோள்கொடுக்க முன்வந்தார்.

இவரது நேர்மையும், ஆர்வமும், தகுதியும் உணர்ந்த சுயமரியாதைத் தலைவர்கள் செங்கற்பட்டு மாநாட்டிலேயே இயக்கத்தின் பொருளாளராகத் தேர்ந்தார்கள், நாட்டின் பல பகுதிகட்கும் சென்று பல்வகை நடவடிக்கைகளின் வாயிலாக இயக்கத்தை வளர்த்தார் இவர். கலப்பு மணங்களையும், புரோகிதமற்ற திருமணங்களையும் நிறைய நடத்தியதுடன், தம் முதல் மனைவியார் மறைவுற்ற பின் கைம்பெண்ணாய் இருந்த மஞ்சுளாபாய் அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்று, பெரும் புரட்சி வழிகாட்டியாய் ஒளிர்ந்தார்.

வேண்டாத பழைய சடங்குகளையும் மரபுகளையும் விடாப்பிடியாய்ப் பின்பற்றி வந்த நகரத்தார் குடியினரின் முன்னேற்றத்திற்குச் சுயமரியாதைச் செயல்களின் மூலம் சாலையமைத்தார். தனது மகள் பார்வதியின் திருமணம் 1935இல் நடந்தபோது வாழ்க்கைத் துணைவர் நடராசன் என்பார் கழுத்தில் மகளைவிட்டுத் ‘தாலி’ கட்டும் துணிச்சலான நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்.

“நாட்டுக் கோட்டையாரும் சீர்திருத்தமும்” என்று 1930இல் இவர் எழுதிய கட்டுரை சுவையானது. இப்போது இயக்கத்தால் வெளியிடப்பட்டுவரும் “ஞான சூரியன்” எனும் அரிய அறிவு நூலை முதன் முதலாக இவரே வெளியிட்டார்.

அய்யா அவர்கட்கு ஊர்தியொன்று தேவையாக இருந்த நிலையறிந்த சண்முகனார் தம் மதிப்புயர்ந்த ‘கெடிலாக்’ மகிழுந்தினை எடுத்துக்கொள்ளச் செய்தார். இவ்வண்டி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினையொட்டி அரசினரின் பறிமுதலுக்கு இலக்காகி விட்டது!. அய்யா மீதும், இயக்கத்தின் மீதும் அத்துணைப் பற்று இவருக்கு!

1961ஆம் ஆண்டில் இவர் இயற்கையெய்தியபோதுகூட இவரது உறவினர்கள் இறுதி நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள முன்வரவில்லை! இயக்கத் தோழர்களே இவரது உடலுக்குச் சுடுகாட்டில் எரிமூட்டிக் கடமையாற்றினர்.

வைனாகரம் சண்முகனார் வாழ்க !

மேற்கண்ட சுயமரியாதைச்  சுடரொளியை குறித்து ஒளிப்படங்களோ, பிற தகவல்களோ உங்களிடம் இருப்பின் அதை அனுப்பி இப்பக்கத்தை மேம்படுத்த உதவுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, viduthalai.editorial@gmail.com 

Share

Share on Facebook
Share on Twitter
Share on Whatsapp
Send by Email

உங்கள் வீர வணக்கத்தை செலுத்துங்கள்

Leave a comment