சிவகங்கை எஸ். இராமச்சந்திரன்

  • முதலாம் சுயமரியாதை மாநாட்டையடுத்து பட்டுக்கோட்டையில் சுயமரியாதைத் தொண்டர் மாநாட்டின் இறுதியில் நடந்த பொதுக் கூட்டத்தின் தலைமையேற்றதிலிருந்து தொடர்ந்து நிகழ்ச்சிகளில் ஆர்வம் பொங்கப் பங்கேற்றார் இராமச்சந்திரன்.
  • “தோழர் இராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும் எதற்கும் துணிந்த தீரமும், மனதில் உள்ளதை எவ்வித தாட்சண்யத்திற்கும் பின் வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது மிகமிக அரிதேயாகும்!” என  அய்யா அவர்கள் கவன்றார்.
சிவகங்கை எஸ். இராமச்சந்திரன்

“இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்காவது உத்தியோகம் கொடுக்கமாட்டேன்” என்று பொது மேடையிலேயே சூளுரைத்த சுயமரியாதைச் செம்மல் இராமச்சந்திரனவர்கள், சிவகங்கை சீமைப் பகுதிக்கு மட்டுமின்றி, தென்னகத் திராவிடர் அனைவருக்குமே இனநல வழிகாட்டியாய்த் திகழ்ந்தார்.

முதலாம் சுயமரியாதை மாநாட்டையடுத்து பட்டுக்கோட்டையில் சுயமரியாதைத் தொண்டர் மாநாட்டின் இறுதியில் நடந்த பொதுக் கூட்டத்தின் தலைமையேற்றதிலிருந்து தொடர்ந்து நிகழ்ச்சிகளில் ஆர்வம் பொங்கப் பங்கேற்றார் இராமச்சந்திரன்.

நெல்லையில் 21.7.1929 அன்று, நடந்த சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமையேற்று, இவர் தொலைநோக்குடன் செய்த பேருரையில், சுயமரியாதை இயக்கத்தின் இறுதிப் பலன்களாக “உலகமெல்லாம் ஓர் அய்க்கிய ஆட்சி நாடாகும்; உலகத்திலுள்ள சொத்துகள் பூமிகள் எல்லாம் மக்களுக்குச் சொந்தமாகும்; மனித ஆயுள் இரட்டித்துவிடும்; ஒருவர்க்கொருவர் அன்பும் நட்பும் கூட்டுறவும் கொண்டு மக்கள் சதா சந்தோஷத்துடன் இருப்பார்கள்” என்று குறிப்பிட்டார். இது இவரது சுயமரியாதை மூதறிவைப்பற்றிப் பேசும்.

அடுத்து, சிவகங்கையில் இராமநாதபுரம் மாவட்ட ‘முதல் ஆதி திராவிட மாநாட்டை’ ஏற்பாடு செய்து ஆதி திராவிட மக்களைத் தாழ்வுபடுத்தும் பார்ப்பனர்க்கும், அவர்களைக் கடுமையாக நசுக்கும் பார்ப்பனரல்லாத உயர் ஜாதியினருக்கும் எச்சரிக்கை விடுத்தார். சிவகங்கையில்  வல்லாண்மை படைத்த ‘குடி’யில் 1884ஆம் ஆண்டில் பிறந்து, ‘பி.ஏ’ கல்வியும் ‘பி. எல்.’ படிப்பும் பெற்று, சிறந்த வழக்கறிஞராகவும், கோயில் அறங்காவல் குழுத் தலைவராகவும், ‘தாலுகா போர்டு’ தலைவராயும் இருந்த இராமச்சந்திரன் அவர்கள், இத்தகைய புரட்சிக் கருத்துகளைப் பரப்ப முன் வந்தாரென்றால் சுயமரியாதைக் கோட்பாடுகளில் எந்த அளவுக்கு ஊறிப் போயிருந்தாரென்பது துலக்கமாகிறதன்றோ?

‘நீதிக்கட்சி’ அமைச்சரவையில் சேருமாறு அப்போதைய முதல்வர் முனிசாமியவர்களால் விரும்பியழைக்கப்பட்டபோது, அய்யா அவர்களின் கருத்துப்படி இயக்கப் பணிக்காக அந்த அமைச்சர் பதவியையே வேண்டாமென மறுத்தார். இப்படிப்பட்ட தன்னல மறுப்பாளரை எப்படியேனும் ‘காங்கிரசு’க்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென்ற முயற்சியாக, மதுரை வைத்தியநாதன் அவர்கள் இவரை அழைத்த காலை, “மனிதருள் ஏற்றத் தாழ்வுகளைப் பிரதிபலிக்கும் சின்னமான பூணூலைத் தாங்கள் அகற்றினால் நாங்கள் சேருகிறோம்” என்று மூலத்தில் குறடுபோட்டு, அன்றைய தேசியங்களின் முகமூடியை கிழித்தெறிந்தார்.

மேலும் மேலும் பெரிய நிலைக்கு வரக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் இயக்கத்திலேயே கவலைகொண்டு உழைத்த உண்மைச் சுயமரியாதை வீரராகிய இராமச்சந்திரனவர்கள் எதிர்பாராவகையில் 26.2.1933 அன்று, அவரைச் சார்ந்த மிகப்பெருங் குடும்பத்தினரை வழிவழியாய் இயக்கத்துக்குப் பயன்படுமாறு ஒப்படைத்துவிட்டு இறுதியெய்தி விட்டார்.

“தோழர் இராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும் எதற்கும் துணிந்த தீரமும், மனதில் உள்ளதை எவ்வித தாட்சண்யத்திற்கும் பின் வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது மிகமிக அரிதேயாகும்!” என  அய்யா அவர்கள் கவன்றார்.

இராமச்சந்திரனார் வாழ்க !

மேற்கண்ட சுயமரியாதைச்  சுடரொளியை குறித்து ஒளிப்படங்களோ, பிற தகவல்களோ உங்களிடம் இருப்பின் அதை அனுப்பி இப்பக்கத்தை மேம்படுத்த உதவுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, viduthalai.editorial@gmail.com 

Share

Share on Facebook
Share on Twitter
Share on Whatsapp
Send by Email

உங்கள் வீர வணக்கத்தை செலுத்துங்கள்

Leave a comment