ம. சிங்காரவேலர்

  • அவரது தொண்டுகளில் எண்ணியெண்ணிக் களிக்கத் தகுந்தது அய்யா அவர்கள் சோவியத் சென்று அரசு விருந்தினராய்த் தங்கி அந்நாட்டின் மதிப்புக் குடிமகன் எனும் விருது பெறும் வாய்ப்பினைப் படைத்துதவியமையே.
  • காரணம் அவர் பார்ப்பானாகப் பிறவாது ‘பரதவர்’ குடியில் தோன்றிவிட்டதுதான், “சிங்காரவேல் சர்மாவாக இருந்திருந்தால், அவருடைய சிலையை மாஸ்கோவிலே நிறுவ வேண்டும் என்று மயிலை கூறும்” என்பது அண்ணாவின் ஆய்வுரை.
ம. சிங்காரவேலர்

வரலாற்றின் போக்கினையே முற்றிலும் பாதித்துப் பெரும் திருப்பத்திற்குள்ளாக்கி விட்ட 1925 காஞ்சி மாநாட்டில் தேசியக் கொடியேற்றிய ‘காங்கிரஸ் – கம்யூனிஸ்ட்’ ஆன சிங்காரவேலர் அவர்கள், அதற்கு மூன்றாண்டுகட்குப் பின்னர் நாகை இரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது தந்தை பெரியார் வலியச் சென்று தந்த உண்மையான ஒத்துழைப்பின், அருமையை ஆழமாய்ப் புரிந்து கொண்டவராய், சுயமரியாதை இயக்கத்தின்பால் அக்கறை காட்டினார்.

எழுபது ஆண்டு தாண்டிய முதுமையிலும் அவர் வெளிப்படுத்திய பேரார்வம் சுயமரியாதை இயக்கத் தோழர்கட்குப் புலப்பட்டதால் அவரை மா நாடுகட்கும் பொதுக் கூட்டங்களுக்கும் கருத்துரை வழங்க அழைத்தனர். 1931இல் சென்னைச் சுயமரியாதை மாநாட்டில் இயக்கம் கொண்டிருக்கும் குறிக்கோளை வரவேற்று வாழ்த்தி அய்யாவுக்கு உற்ற தோழரானார். அவரது உடல் நல ஒத்துழைப்பின்மை காரணமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள அவரால் இயலாமற் போனாலும், எழுத்துகள் என்னும் ஆற்றல் நிரம்பிய கருவியின் மூலமாகச் சுயமரியாதை அன்பர்களுடன் உறவாடி, ஆக்கமும் ஊக்கமும் வழங்கினார். 1931லிருந்து 1935 வரை ‘குடிஅரசு’ ஏட்டில் அவரது கட்டுரைகள் வெளியாகி, சுயமரியாதைப் பாடங்களாக ஒளிகாட்டின.

கடவுள், மதம், பேய் – பிசாசு – ஆவி, பிரபஞ்சத் தோற்றம், பொருளாதாரம், அரசியல் என்பனவற்றையெல்லாம் வேர் வேராய், நார் நாராய்ப் பிரித்துக்காட்டிப் பேரறிவு புகட்டினார். “கடவுளும் பிரபஞ்சமும்” என்னும் தலைப்பில் அவரால் ‘குடிஅரசு’ இதழில் எழுதப்பெற்ற கட்டுரைகள் நூலாக அய்யா அவர்களால் வெளியிடப்பட்ட போது, அந்நூல் மக்களிடையே பரபரப்பையேற்படுத்தியதால் சிங்கார வேலரை நாட்டின்

மூலைமுடுக்குகளிலிருந்து மக்கள் சரமாரியாகக் கேள்விகள் கேட்க, அவற்றிற்கு விடையளிக்கும் முறையில் அவர் வரைந்த கட்டுரைகள் ‘மெஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்’ எனும் நூல் வடிவம் பெற்று நாடு முழுவதும் வெற்றிக் கொடி நட்ட தென்றால், அவரது எழுத்துகளில் அடங்கியிருந்தது பெரும் வல்லமையன்றோ! “சுயராஜ்யம் யாருக்கு?” என்ற நூலும் தனிச்சிறப்புப் படைத்தது. 31.12.1933இல் சென்னையில் நடந்த நாத்திகர் மாநாடு, 04.03.1934இல் மன்னையில் நிகழ்ந்த சமதர்ம மாநாடு இரண்டிலும் அவர் ஆற்றிய தலைமை உரைகள் அரிய தத்துவ விளக்கங்களாகும்.

அவரது தொண்டுகளில் எண்ணியெண்ணிக் களிக்கத் தகுந்தது அய்யா அவர்கள் சோவியத் சென்று அரசு விருந்தினராய்த் தங்கி அந்நாட்டின் மதிப்புக் குடிமகன் எனும் விருது பெறும் வாய்ப்பினைப் படைத்துதவியமையே.

அய்யா நாடு மீண்டதும் இருவரும் சேர்ந்துதான் சுயமரியாதைத் தொண்டர்கள் மாநாட்டில் சமதர்மத் திட்டம் தீட்டினர்.

1937-1938 முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, “பூரண சுயராஜ்யத்தில் தமிழ் மாகாண அரசியலில் இந்திக்கு எந்த இடமும் இல்லையென்று வற்புறுத்துகின்றோம். தமிழ்நாட்டுச் சமதர்மவாதிகளாகிய நாங்கள் எங்கள் தமிழ்நாட்டில் தமிழ் பாஷையிலன்றி, மற்ற எந்த அந்நிய பாஷையிலும் எங்கள் நாட்டு அரசியலை நடத்த விடமாட்டோம்” என அவர் முழங்கினமை தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் என்றென்றைக்கும் நினைவிலிறுத்திக் கொள்ள வேண்டிய துணிவுரையாகும்!

இத்தகைய உடல் தளர்ந்தாலும் உறுதி தளராத சிங்காரவேலர் 11.02.1946 அன்று உயிரொடுங்கினார். சென்னையில் 18.02.1860இல் திரு. வெங்கடாசலம் அவர்களின் மகனாகப் பிறந்து சென்னையிலேயே பட்டப் படிப்பும், சட்டப்படிப்பும், பயின்று பாட்டாளிகளுக்காகப் பாடுபட்டு, பத்தாண்டுச் சிறைத்தண்டனையைப் பரிசாக ஏற்று உலகத்தின் மாபெரும் தலைவராகவே மதிக்கப் பெற்று, முழுக் குறிக்கோள் வாழ்வு வாழ்ந்து, சுயமரியாதை – பொதுவுடைமைக் கொள்கைகளின் விரிவுரைபாளராக விளங்கிய சிங்காரவேலர் ஆரியத்தால் இருட்டடிப்புப் பண்ணப்பட்டார் வழமையாக,

காரணம் அவர் பார்ப்பானாகப் பிறவாது ‘பரதவர்’ குடியில் தோன்றிவிட்டதுதான், “சிங்காரவேல் சர்மாவாக இருந்திருந்தால், அவருடைய சிலையை மாஸ்கோவிலே நிறுவ வேண்டும் என்று மயிலை கூறும்” என்பது அண்ணாவின் ஆய்வுரை.

வாழ்க சிங்கார வேலர் !

மேற்கண்ட சுயமரியாதைச்  சுடரொளியை குறித்து ஒளிப்படங்களோ, பிற தகவல்களோ உங்களிடம் இருப்பின் அதை அனுப்பி இப்பக்கத்தை மேம்படுத்த உதவுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, viduthalai.editorial@gmail.com 

Share

Share on Facebook
Share on Twitter
Share on Whatsapp
Send by Email

உங்கள் வீர வணக்கத்தை செலுத்துங்கள்

Leave a comment