திரு. வாசுதேவன்-திருமதி கண்ணம்மாள் ஆகிய பெற்றோரின் மகனாக, 20.3.1900 அன்று, தஞ்சை மாவட்டக் கருக்காக்குறிச்சி என்னும் சிற்றூரில் பிறந்து, பின்னாளில் ‘அஞ்சாநெஞ்சன்’ என நம் இயக்கத்தவர்களால் கொண்டாடப்பெற்ற தளபதி அழகிரிசாமியவர்களின் கல்வி, தொடக்கப் பள்ளிப் படிப்போடு நின்று விட்டது.
சிறு பருவத்திலேயே தந்தையை இழந்துவிட்ட அழகிரி, கட்டுக்கடங்காத காளையாகத் திரிந்துகொண்டிருந்த நிலையில், முதலாம் உலகப் பெரும்போர் நடந்து கொண்டிருந்ததால் நம் நாட்டுப் போர்ப்படையில் சேர்ந்து, மெசபட்டோமியாப் பகுதிவரை சென்று போர்த் தொண்டு புரிந்து, நிறையப் பட்டறிவு பெற்றுத் திரும்பினார்.
படையிலிருந்து விடுவிக்கப்பட்டு, அக்காலத்தில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கப் பணிகளில் உழைத்து வந்த தம் சிற்றப்பா பட்டுக்கோட்டை வேணுகோபால் அவர்களின் இல்லத்தில் வாழ்ந்து வந்தபோதும் அழகிரியவர்கள் கதராடை பூண்டு நெற்றியிலே நாமம் தரித்துப் பரந்தாமன் பெயரைப் பக்தியுடன் மொழியும் காந்தி சீடராகவே ஒழுகினார். ஆனால், சேரன்மாதேவி ‘பரத்வாஜ ஆசிரம’த்தில் நடந்த பார்ப்பனக் கொடுமையை எதிர்த்து அய்யா அவர்களும், ஏனைய பார்ப்பனரல்லாத் தலைவர்களும் கடுமையாகப் போராடியபோது தான் அழகிரி, அய்யா கருத்துகளை முழுமையாக ஏற்கும் பக்குவம் எய்தினார். ‘பாரதமாதா சங்கம்’ வைத்து நடத்திக் கொண்டிருந்தவர் ‘பார்ப்பனரல்லாத காங்கிரஸ் வாலிபர் சங்கம்’ கண்டார்.
அந்தக் காலக் கட்டத்தில்தான் சுவையூட்டும் அந்த நிகழ்ச்சி ஏற்பட்டது. ஊர்-கானாடுகாத்தான். திருமண ஊர்வலம் ஒன்றில் நாதசுர மேதை மதுரை சிவக்கொழுந்து ஒரு மூன்று முழத் துண்டைத் தம் தோளின் மீது போட்டுக்கொண்டு இசை மழை பொழிகிறார். இசை மழையில் நனைந்து இன்ப மயக்கத்திற்குள்ளாகியிருக்கும் பெரும் மக்கட் கூட்டத்தில், இசை வெறியரான அழகிரியும் நிற்கிறார். திடீரென ஓர் இளைஞரின் குரல்: “துண்டைத் தோளிலிருந்து எடு! இடுப்பில் கட்டிக்கொண்டு வாசி!” சிவக்கொழுந்துவின் பணிவான விடை: “வியர்வையைத் துடைத்துக்கொள்ளவே தோளில் துண்டு. இடுப்பில் அணிந்தால் அது முடியாதே.” ஆனால், அந்த இளைஞரின் வீம்பு: “விடமாட்டேன்!”
ஆத்திரம் பீறிடுகிறது அழகிரிக்கு. சிவக்கொழுந்து அவர்களிடம் சென்று, “துண்டை இடுப்பில் கட்ட வேண்டாம்; அப்படியே இருக்கட்டும்!” என்கிறார். ஊர்வலம் நடுத்தெருவில் நிற்கிறது. அவ்வூரிலேயே அய்யா அவர்களும் தங்கியிருப்பதால் அவரிடம் விரைந்து அடுத்த நடவடிக்கைக்கான இசைவு பெற்றுத் திரும்பும் அஞ்சாநெஞ்சன், “என்ன வந்தாலும் நானிருக்கிறேன்; தோள் துண்டை எடுக்கக்கூடாது” என்கிறார். வழக்கு அய்யா வரைக்கும் போகிறது. அய்யாவின் தீர்ப்பு எப்படியிருக்கும்? இறுதியில் சிவக்கொழுந்து தோளில் துண்டணிந்தவாறே பெருமிதமும் ஆர்வமும் ஓங்க இசை விளையாடல் புரிந்துவர, அழகிரியவர்கள் ஒரு பெரிய விசிறியால் அவருக்கு வீசிக்கொண்டே வர ஊர்வலம் நடந்தேறுகிறது!
இந்த அரிய நிகழ்ச்சி அழகிரியவர்களின் பின்னாளைய சுயமரியாதை இயக்க நடவடிக்கைகளுக்கு முன்னோட்டம் எனலாம்.
அய்யாவின் சமுதாயத் தொண்டு, 1925 இல் இருந்து தொடங்கியபோது அழகிரி தம்மை அதில் ஒப்படைத்துக் கொண்டார். சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்பச் சுழன்று சுழன்று பணியாற்றிய முன்னணித் தோழர்களில் முதல்வராக விளங்கினார் அவர். அய்யா அவர்கள் அவரின் சுயமரியாதைப் பிரச்சாரத்திற்காக அவருக்கு மாதச் சம்பளம் கொடுப்பதாகக் கூறிய போது, அதனை மறுத்துவிட்டார் என்றால், அவரின் பொதுத் தொண்டின் உயர் தன்மை எளிதில் புரிகிறதன்றோ?
நாட்டின் பட்டிதொட்டியனைத்திலும் பயணம் செய்து, படித்தவர்களின் பாமரத் தன்மையையும், படியாதோரின் ஏமாளித் தன்மையையும்; பார்ப்பனர்தம் போலித் தன்மைகளையும் தெளிவுபடுத்துவதில் வெற்றி கண்டார். மேடையில் நிற்கும் தோற்றப் பொலிவு, வெண்கலக்குரல், ஊற்றெடுத்துப் பெருகும் உணர்ச்சி, தமக்கென அமைத்துக்கொண்ட ‘ரதகஜதுரக பதாதிகள், ஓட்டை உடைசல், செம்பு, பித்தளை, அண்டபிண்ட சராசரம்’ போன்ற சொல்லாட்சிகள், நகைச்சுவைக் கதைகள், எல்லோருக்கும் புரிகின்ற எளிய மொழி ஆகியவற்றின் கலவையால் தனிப் பாணியாய் அமைந்தது அவரது மேடைப் பேச்சு. மூன்று மணி நேரம் நீண்ட அந்தப் பேச்சைக் கேட்ட மூடத் தமிழனின் இயங்காத மூளை வேலை செய்தது! அதன் பயனாய் அடிமைத் திராவிடனின் கூனல் நிமிர்ந்தது!
நல்ல நல்ல விளைச்சலை அறுவடை செய்த அந்தச் சொற்பொழிவை எந்தச் சூழ்நிலையிலும் நிறுத்தவில்லை அழகிரியார். அதைக் கொண்டு சுயமரியாதை இயக்கத்திற்குத் தோன்றிய பலவகையான எதிரிகளையெல்லாம் தோற்கடித்தார். இயக்கத்திற்கு ஆயிரமாயிரம் வீரர்களாம் இரும்புத் துண்டுகளைக் கவர்ந்திழுக்கும் காந்தமெனத் துலங்கினார் அவர். அவரது பேச்சு நடையைப் பல இளைஞர்கள் பின்பற்ற முனைந்தனர்.
மேடைகளில் சொற் பெருக்காற்றுவதோடு மட்டும் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. அவ்வப்போது அழகான கட்டுரைகளையும் வரைந்து எதிரிகட்கு அறிவுகொளுத்தும் கடமையையும் புரிந்தார். நடவடிக்கைகளில் அவ்வப்போது பொறுப்புகளும் ஏற்றுச் செவ்வனே ஆற்றி முடித்தார். 1931இல் ஈரோட்டில் நடந்த இரண்டாம் மாகாணச் சுயமரியாதை மாநாட்டின் தொண்டர் படைத் தலைவராக இருந்து, மிகச் சிறப்பாகச் செயலாற்றி மாநாட்டின் வெற்றிக்கு அடிப்படையானார். முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது திருச்சியிலிருந்து 1.8.1938 இல் கிளம்பி ‘600 மைல்கள்’ நடந்தே 11.9.1938 அன்று, சென்னை சேர்ந்த இந்தி எதிர்ப்புப் பிரச்சாரப் படையின் அணித் தலைவராகப் பணி செய்து, பெரும் பரபரப்பும் எழுச்சியும் நாட்டிலே உருவாக்கினார் அழகிரியவர்கள். இவ்வாறு புதிய வரலாறு படைத்துக் காட்டுவதில் அவருக்கு ஆர்வம் அதிகம்!
வாழ்நாள் முழுதும், சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதில்-நோய்வாய்ப்பட்ட நேரங்கள் தவிர-ஓய்வாய் இருந்தது கிடையாது, நமது அஞ்சாநெஞ்சன். இரண்டாம் உலகப் போரின்போது மாவட்டப் போர்ப் பிரச்சார அதிகாரிப் பதவியை அய்யாவின் ஒப்புதலுடன் அவர் ஏற்றுக் கொள்ளுகையில் சுயமரியாதைப் பிரச்சாரம் செய்யக்கூடாதென நிபந்தனை போடப்பட்டதென்றாலும், பிற அதிகாரிகள் புராணக் கருத்துகளைக் கலந்து பேசியதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு சுயமரியாதைக் கருத்துகளை அள்ளி வீசத் தயக்கம் காட்டவில்லை அவர். 1935இல் இலங்கையில் நடந்த தேர்தலின்போது திருமதி-இராஜரத்தினம், திரு.ஹாமில்டன் ஆகியோர் சார்பில் பிரச்சாரம் செய்வதற்கு அழைக்கப்பட்டு ஒரு மாதம் அங்கு தங்கியிருந்த அழகிரியார் ஆற்றியதென்ன தெரியுமா? தோட்டத் தொழிலாளர்களிடத்திலே சுயமரியாதைத் தத்துவ விளக்கப் பாடங்களே!
23.8.1948 அன்று, சென்னைக்கு வருகை தந்த அன்றைய ‘கவர்னர் ஜெனரல்’ இராஜகோபாலாச்சாரியாருக்குக் கருப்புக்கொடி காட்டும் நடவடிக்கையைத் திட்டமிடுதற்காக முந்திய நாள் கூடிய மத்திய நிருவாகக் குழுவினர் அனைவருடனும் சேர்ந்து அழகிரியும் கைதானார்.
கடுமையான உழைப்பின் சின்னமாய் உலவிய தளபதியவர்கள் பெரும் உடல் நலக் கேட்டைப் பல காரணங்களால் வரவழைத்துக் கொண்டார். நலம் குன்றியிருந்தும் 1946இல் மதுரைக் கருஞ்சட்டைப் படை மாநாட்டிற்கு வந்து, அவர் உரை நிகழ்த்துகையில்தான் கயவர்கள் மாநாட்டுப் பந்தலைத் தீக்கிரையாக்கினர்.
1929இல் முதலாம் சுயமரியாதை மாநாட்டின் இறுதி நிகழ்ச்சிகள், இரவு 10:00 மணியிலிருந்து அதிகாலை 5:00 மணி வரை வரலாறு காணா வகையில் நடந்தபோது நீர்வீழ்ச்சியென இரைந்துரை செய்த நம் தளபதியவர்கள், 1948இல் ஈரோட்டு இந்தியெதிர்ப்பு மாநாட்டில், “உங்கள் அனைவரையும் மறுபடியும் காண்பேனா? சொல்ல முடியாது. என் தலைவருக்கும் தோழர்களுக்கும் இறுதியாக என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளவே இப்போது வந்தேன்” எனத் தழுதழுத்த குரலில் கூறி அழ வைத்தார் அரை லட்சம் பேரை!
அவர் குறிப்புக் காட்டியபடியே நிகழ்ந்தது. 28.3.1949 அன்று அடங்கி விட்டார் அழகிரி. “சமுதாயத்தின் என்புருக்கியான ஆரியச் சழக்கரோடு தீவிரமாகப் போர் தொடுத்த அவரின் உடம்பை என்புருக்கி நோய் இரையாகக் கொண்டுவிட்டது” என்று ‘குடி அரசு’ பொருத்தமாய் இரங்கல் தெரிவித்தது,
“தனக்கு எவ்விதத் தொல்லைகள் ஏற்பட்ட போதிலும் தன் கருத்தையோ, கொள்கையையோ, தொண்டையோ கொஞ்சம்கூட மாற்றிக்கொண்டது கிடையாது. பிடிவாதமான கட்சிப் பற்றுடன் நடந்து கொண்டார் என்பது தளபதியைப் பற்றித் தந்தையின் புகழுரை. அவரால் காணப்பட்ட நம் இயக்கமும், அவ்வியக்கத்தின் அழுத்தமான கொள்கைகளுந்தான் நான் மாற்றமடையாததற்கும் தன்மதிப்போடு விளங்குவதற்கும் முதற் காரணம்” என்பது அழகிரியார் முன்னமேயே தந்துவிட்ட தன்னிலை விளக்கம்!
“எனக்கு அஞ்சாநெஞ்சத்தை அளித்தவர் பெரியார்தான்” என விளம்பிய தளபதியின் பண்பாடு அவரது சான்றாண்மையை நிலை நாட்டுகிறது.
வாழ்க அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி!