சுயமரியாதை இயக்கத்தின் முதல்கட்ட முன்னணி வீரர்களின் பல்துறைப் பணிகளில் நடராசன் அவர்கள் மேற்கொண்ட பங்கு ஏனையோரால் நிறைவேற்ற முடியாதது என்பது மிகையில்லாத உண்மை.
மாயவரத்தில் ஒரு செல்வக் குடும்பத்தில், 7.1.1902 இல் பிறந்த நடராசனார், பிற பல தலைவர்களைப்போன்றே காங்கிரசுப் பற்றுடையவராகத்தான் இளமை வாழ்க்கையைத் தொடங்கினார். தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டுத் தனி இயக்கம் கண்டபோது, தாமும் பெரியார் பேரியக்கத்தில் இணைந்து கொண்டார். இவ்வாறு தொண்டர் நிலையில்தான் இயக்கத்திற் சேர்ந்தாரெனினும் அவரது தீவிரத் தன்மையால் விரைவில் முன்னணித் தலைவர்களில் ஒருவராகிவிட்டார். சுயமரியாதைக் கூட்டங்கள் நடைபெறவே முடியாமல் அரசியற் கயவர்களும் அவர்தம் அடிதாங்கிகளும் கலவரம் செய்த காலமது. அந்தச் சூழ்நிலையில் நடராசனவர்கள், அய்யா பேசும் கூட்டங்களுக்கு முன்கூட்டியே தமது மறவர் படையுடன் போயிருந்து, எல்லா சூழ்ச்சிகளையும் காலித்தனங்களையும் சமாளித்து, கூட்டங்களை வெற்றியோடு நடத்தித் திரும்புவார். இவரது தனியாற்றல் கருதி, இரண்டாம் சுயமரியாதை (ஈரோடு) மாநாட்டில், இவருக்குப் பந்தல் அமைப்பு, அலங்காரப் பொறுப்பு அளிக்கப்பட்டது.
அவரது வாழ்க்கைக் குறிக்கோளெல்லாம், அய்யா அவர்களைப் பாதுகாப்பதன் மூலம் இன நலத்திற்குத் தொண்டு செய்வதே. ஆயினும், அதை மட்டுமே அவர் செய்துவந்தார் என்பதன்று. செய்தித் தாள்களையும், இதழ்களையும் நிரம்பப் படித்து நிறையப் பொது அறிவு கொண்டு, நல்ல நினைவாற்றலோடு கருத்துகளை மக்களுக்கு விளக்குவார். சிறந்த கட்டுரைகளைக் ‘குடிஅரசி’ல் எழுதினார். தாமே, ‘வெற்றிமுரசு’ யெனும் இதழ் ஒன்று நடத்தி அரிய கொள்கை விளக்கங்களை அளித்தார்.
அய்யாவின் விருப்பப்படி அரை நூற்றாண்டுக்கு முன்பே, தமது மகனுக்கு ‘லெனின்’ என்று பெயரைச் சூட்டி மகிழும் உளப்பக்குவமும் துணிச்சலும் கொண்டிருந்தார்.
இயக்க மாநாடுகளை வெற்றியுடன் நடத்தித் தருவதிலும், சுயமரியாதை மணங்களை நிறைவேற்றி, ஊக்குவிப்பதிலும், பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதிலும் நடராசனார் அக்கறையுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
அந்தக் காலத்திலேயே, வடபுலத்திலிருந்து மாயவரம் வந்த நேரு, இராஜேந்திர பிரசாத் ஆகிய தலைவர்கட்கு நம் வெறுப்பைக் காட்டும் வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடத்தி வெற்றி கண்டவர்.
‘குடி அரசு’ இதழ் இடையூறுகளின்றி நடந்து வர வேண்டுமென்பதில் பேரார்வம் கொண்ட இவர், அடிக்கடி ஈரோடு சென்று அய்யா அவர்கட்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து அனைவரின் அன்பையும் வென்றார். எனவே, முதன் முறையாக அய்யாவுடன் கீழை நாட்டுச் சுற்றுப் பயணத்தில் பங்கு கொண்ட தோழர் குழுவில் நடராசனும் இருந்தது இயல்பானதே.
இந்த உயர் தகுதியில் இருந்த இவர், தம்மை எப்போதும் ஒரு தொண்டர் நிலையிலேயே வைத்து ஒழுகினார். அய்யாவின் ஒவ்வொரு சொல்லுக்கும் கீழ்ப்படிந்து நடந்து, பிறருக்கு ஓர் எடுத்துக் காட்டாக வாழ்ந்து காட்டிய இவரது பக்குவத்தை மற்றவர்கள் வியந்தனர்! தமக்கென்று ஒரு தனிக் கருத்து இவர் வைத்துக் கொண்டதில்லை; தலைவரின் கருத்துக்கு மாறாக நடப்பவர்களை அறிவுரை கூறித் திருத்தவும் செய்தார். இயக்கத்தின் அடிப்படைத் தொண்டர்களிடம் மிக்க பரிவுகாட்டி, ஊக்கப்படுத்தி அவர்களின் பாசத்திற்குரிய தோழராக இலங்கினார்.
இயக்கத்தின் இப்படிப்பட்ட அரிய உடைமை திடீரென்று 10.7.1937 அன்று இயற்கையினால் பறிக்கப்பட்டது. ஆம், ‘வீரமே உருவென விளங்கிய அஞ்சா நெஞ்சர், மாயவரச் சிங்கம்’ தமது தலையைச் சாய்த்தது. “சுயமரியாதை இயக்கத்தில் அவருடைய இடத்தைப் பூர்த்தி செய்கிற மாதிரி வேறு ஒருவரும் வரவில்லை” என அய்யா ஏக்கப் பெருமூச்செறிந்தார்.
“பணம், காசைப் பற்றியோ, தண்டனை, கண்டனைகளைப் பற்றியோ துன்பம் தொல்லைகளைப் பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் எந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி” என்று ‘குடி அரசு’ சுயமரியாதைத் தூணுக்கு வீர வணக்கம் செலுத்தியது. இவர் போன்றாரெல்லாம் நம் இனவுய்வுக்காகத் தமது கடும் உழைப்பினால் செம்மைப்படுத்திய சாலையிலே தான், இன்று பகுத்தறிவு இயக்கம் என்னும் ஊர்தியை ஓட்ட முடிகிறது.
வாழ்க நடராசன்!
மாயவரம் சி.நடராசன் மறைவு
– ‘விடுதலை’, 2.7.1937