திரு. கனகசபை – திருமதி இலக்குமி ஆகியோரின் செல்வனாய் 29.4.1891இல் புதுச்சேரியில் பிறந்து, தமிழினத்திற்கே தனிப்பெருமை சேர்த்தவர் ‘புரட்சிக்கவி’ என்றும், ‘புதுவைக் குயில்’ என்றும் பெயர் பெற்ற பாரதிதாசன் அவர்கள்.
ஃபிரெஞ்சு மொழிப் பள்ளிப் படிப்பும் தமிழ்மொழிப் பள்ளிக் கல்வியும் பெற்ற அவர், தமிழ்ப் புலமைத் தேர்வில் முதல் மாணவராகத் தகுதி பெற்றார்.
கதர்த் துணி விற்கும் ‘காங்கிரசு’க்காரராயும், ‘சுப்பிரமணியர் துதியமுது’ பாடிய பக்திக் கவிஞராயும் இருந்த சுப்புரத்தினப் புலவர் சுயமரியாதைப் பாவலராக மாறியது 1928 ஆம் ஆண்டிலாகும்.
அய்யா அவர்களின் சொற்பொழிவை மாயவரத்தில் கேட்கும் வாய்ப்புக் கிட்டப் பெற்ற அவர், சுயமரியாதைக் கொள்கைகள் தாம் தமிழர்களை உய்விக்கும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டார். அவ்வளவுதான்; தம்மை இயக்கத்திற்கு ஆட்படுத்திவிட்டார்.
“பார்ப்பனியம் மேலென்று சொல்லிச் சொல்லி,
பழையுகப் பொய்க் கதையைக் காட்டிக் காட்டி,
வேர்ப் புறத்தில் செந்நீரை வார்த்து வார்த்து,
மிகப் பெரிய சமூகத்தை இந்நாள் மட்டும்
தீர்ப்பரிய கொடுமைக்குள் ஆக்கிவிட்ட
செயல் அறிந்து திடுக்கிட்ட வீரா”!
என்ற பாட்டு எழுந்தது அப்போதே.
தொடர்ந்து, ‘குடி அரசு’க் கட்டுரைகளைப் படிக்கப் படிக்க ஒரு புதுப் பிறவியெடுத்த நிலையெய்தினார் கவிஞர்.
“பாழாண்ட படிவிட்டே அறிவியக்கப்
படியேற்றிப் படியேற்றி, நாங்கள் கொண்ட
வாழாத நிலை நீக்கி, வாழ் நிலைக்கு
வரச்செய்யப் பணியாற்றும் நன்மைதன்னில்
சூழ்கின்ற ‘குடிஅரசே’, வெல்க! உன்றன்
சுயமரியாதைக் கொள்கை வெல்க நன்றே!”
என்று வாயார வாழ்த்தினார்.
‘குடி அரசு’ ஏட்டில் 10.03.1929 இல் “எங்கள் நிலையின் ஈனத்தைக் காண உள்ளம் நாணியோ உன்றன் ஒளியிற் குன்றிக்குன்றி மேற்றிசை சென்றிடுகின்றாய்?” எனப் பரிதியை நோக்கி வினவும் ‘நாளுக்கு நாணம்’ எனும் அகவல் வெளியாகி அவரது ஏக்கத்தைக் காட்டியது.
அவர்தம் உள்ளத்தில் வீசிய புயலை எழுத்துகளாக மாற்றி உலவவிட்டு நாட்டிலே புயல் வீசப் பண்ணினார். “சுயமரியாதை கொள் தோழா நீ துயர் கெடுப்பாய்! வாழ்வில் உயர்வடைவாயே!” என்று பாடினார்.
“இன்று வீழ்ந்தவர் பின்னர் விழித்ததற்கே அடையாளம் – வாய் விட்டிசைப்பீர்கள் சுயமரியாதை எக்காளம்!” என்று ஊதினார்.
“புதியதோர் உலகம் செய்வோம்! பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப் பேசு சுயமரியாதை உலகெனப் பேர் வைப்போம்!” என ஆடினார்.
‘கிண்டற்காரன்’ என்னும் புனைப் பெயரில் “சுயமரியாதைச் சுடர்” எனும் சிறு நூலொன்று 1931இல் அவரால் வெளியிடப்பெற்றது.
தாலாட்டுப் பாடலிலிருந்து தந்தையர் பாட்டு வரை தன்மானக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு ஆயிரக்கணக்கில் அவர் புனைந்த பாக்கள் சூறாவளியாகி, தமிழினத் தலைவர் மூட்டிய அறிவு நெருப்பைக் காட்டுத் தீயாகப் பரப்பியமை கண்டு உவகையுற்றதால் அய்யா அவர்கள் “சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி” எனப் பாராட்டினார்.
புராண இலக்கியச் சான்றுகளை வைத்து அவர் எழுதி நடத்திய ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நாடகம் நாட்டிலே பரபரப்பினை உண்டாக்கியது. எனவே, அது அரசினரின் தடை நடவடிக்கைக்கும் இலக்காகியது!
தமிழினம் தொடுத்த முதலாம் இந்தி எதிர்ப்புப் போர்க் காலத்தில் அவரின் கவிதைகளின் முதல் தொகுதி வெளிவந்தமையால் இன உணர்ச்சி பரப்பும் நம் இயக்கத்திற்கு, அது பேருதவியாக வாய்த்தது. இரண்டாம் போரின் போது, ‘இந்தி எதிர்ப்புப் பாடல்கள்’ என்னும் நூலே வெளியிட்டார் பாவலர்.
“தமிழிசையே எங்கட்கு வேண்டும்” என்பதாகத் தமிழினத்தின் பல்பிரிவுத் தலைமக்களும் இணைந்து கிளப்பிய அறைகூவலுக்குப் பாவடிவம் ஈந்து வெற்றிக்கு உதவி புரிந்தார் பாவேந்தர்.
‘இளைஞர் இலக்கியம்’ யாத்துத் தந்த புதுவைக் கவிஞரின் புதுமை நூல்கள் அத்தனையையும் இளைஞர்கள் பயின்று மனப்பாடம் செய்து நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் முழக்கமிட்டனர்.
புரட்சிக் கவிஞர் முத்தமிழிலும் வல்லவர். நன்றாகப் பாடவும் நடிக்கவும் திறம்படைத்த அவர் செய்யுள் வகைகளோடு ‘இசையமுது’ என்னும் இசைப் பாடல்கள் பல சமைத்ததால், அவை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பயன்படுத்தப் பெற்று, கொள்கை பரப்பும் முயற்சியின் ஒரு கூறாகவும் விளங்கின.
பாக்களுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை அவர், ‘குடிஅரசி’ல் கட்டுரைகளும் எழுதினார். 1949இல் தொடங்கப்பட்ட அவரின் ‘குயில்’ ஏட்டில் கட்டுரைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், உரையாடல்கள், நாடகங்கள், துணுக்குகள் ஆகியவற்றையும் நூற்றுக் கணக்கில் வரைந்து இயக்கத் தொண்டு புரிந்தார்.
“அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா? சுயமரியாதைக்காரர் கூச்சல் வீணாகுமா? இதுவரைக்கும் வீணாயிற்றா?” என்று கூவிய அவர் “கடவுள் தேவையா?” “பகுத்தறிவுக்குத் தடை”, “கும்பகோண மகாமகம்”, “பகற்கொள்ளையே, உன் பெயர்தான் புரோகிதமா?” எனும் கட்டுரைகளின் வாயிலாக நம் மக்களின் மடமையைச் சுட்டிக் காட்டுவதிலும் சுரண்டல் கும்பலின் கொட்டத்தை மட்டந்தட்டுவதிலும் நிறைய வெற்றி பெற்றார்.
“வாரிவயலார் வரலாறு” எனும் அவரின் நெடுங்கதை சுயமரியாதையின் அடிப்படைக் கோட்பாடுகளைச் சுவையுடன் தெளிவுபடுத்திற்று. “மக்களில் ஒரு சிலரை மிகக் கடுமையாக வெறுத்துத் தாக்குகிறார்; ஆகவே இவரை மக்கள் கவிஞர் என ஏற்றுக் கொள்ள வொண்ணாது” என்றனர் வயிற்றெரிச்சல் கொண்டோர் சிலர். ஆயினும் அதுபற்றிச் சற்றும் கவலைப்படாமல், “தேசமக்களின் மனத்தில் ஊறிக் கிடக்கும் எண்ணம், அவர் நடை இவற்றை எதிர்க்கும் முறையில் தான்! நாட்டுக்கு நலன் உண்டு என்று தோன்றினால் அஞ்சாது எதிர்ப்பவர் வீரர், தேச பக்தர்; அவ்வகைச் சுயமரியாதை வீரர்களின் பாதங்களில் இந்நூலைச் சமர்ப்பணம் செய்கிறேன்” என உணர்ச்சி வழிய உறுதியாய் நின்றார். “தன்மானம் காக்கும் இராமசாமியின் புதுக்கொள்கைகள் சன்மானம் பெற்ற நாடு” என்று தமிழகம் சுயமரியாதைத் தந்தையை அடைந்தமை பற்றிப் பெருமைப்பட்டார் இனப்பற்றுமிக்க புரட்சிக் கவி.
‘குயில்’ இதழ் அரசினரால் தடைசெய்யப்பட்டது 1946இல் என்றாலும், முயற்சி மேற்கொண்டு ‘குயில்’ மீண்டும் கூவுமாறு செய்துவிட்டார்.
இவ்வாறு தம் எழுத்துத் தொண்டினை மட்டும்தான் இயக்கத்திற்கு வழங்கினாரா? இல்லையில்லை; தம் பேச்சுகளின் வாயிலாகவும் பயனுள்ள அருந்தொண்டு புரிந்தார் கவிஞர். ஓர் ஆளுடன் நேர் நின்று உரையாடுதல் போலப் பாவித்துக்கொண்டு உணர்ச்சி கொப்பளிக்கச் சொற்பொழிவு நிகழ்த்தும் தம் தனிப் பாணியினால் மக்களிடையே உணர்வு அலைகளை மிதக்க விடுவதில் தேர்ந்தவர் நம் கவிஞர். அவரது தோற்றமும் குரலும் பிறருக்கு வாயாதவையாகும்.
எண்ணத் தொலையா இயக்க மாநாடுகளிலும், கூட்டங்களிலும் ஏனைய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கருத்துரைகள் அளித்தார். 26.11.1958இல் சிதம்பரத்தில் நடந்த சுதந்திரத் தமிழக மாநாட்டுத் தலைமையேற்று, “‘இங்கு பார்ப்பான் இருக்கக் கூடாது; பார்ப்பானுக்குப் பிறந்தவனும் இருக்கக் கூடாது. இதை எதிர்க்கிறவன் எவனோ அவன் பார்ப்பானுக்குப் பிறந்தவன் என்றுதான் அர்த்தம்!” எனப் புரட்சிக் கவிஞர் முழங்கியது அவரது நெஞ்சுத் திறத்தையும் வாய்த் திறத்தையும் காட்டும்.
‘தமிழகப் புலவர் குழு’வில் உறுப்பினராக இடம் பெற்ற பாவேந்தர் அவ்வப்போது ஆரியத்தின் சார்பாளராய் ஒழுகும் புலவர்களோடு வழக்காடி, நம் இனமானத்தைக் காப்பாற்றுவதில் கருத்தாய்க் கடமையாற்றினார்.
திருக்குறள் மாநாடுகளில் அய்யா அவர்களுடன் இணைந்து கலந்துகொண்டு அவர் வழங்கிய தெளிவுரைகள் புரட்சித் தன்மை வாய்ந்தவை.
“தந்தை பெரியாரின் இலக்கியப் பதிப்பாக” உலா வந்த புதுவைக் கவிஞரைத் திருவள்ளுவருக்கும் மேலானவராகக் கருதிய அய்யா அவர்கள், “பாரதிதாசனைப் போல் நமது நாட்டில் புரட்சிப் புலவர்கள் தோன்றி இருந்திருப்பார்களேயானால், நமக்கு 2000, 3000 ஆண்டுகளாக இருந்துவரும் இழிதன்மை வந்திருக்குமா?” என்று கூறி உளமாரப் பாராட்டினார்.
அய்யா – மணியம்மை திருமண ஏற்பாட்டின் போது, சற்று மனமயக்கத்திற்குள்ளான கவிஞரவர்கள் விரைவில் தெளிவடைந்து, பிரிந்து சென்றோர் அமைப்பில் தம்மைப் பிணைத்துக் கொள்ளாமல் வாழ்நாள் முழுதும் அய்யாவின் பாசறையிலேயே பணிபுரிந்தார்.
“முன்னேறும் திறம் வேண்டும்; மொய்ம்பேறும் தோள்கள் வேண்டும்; தன்மானம் நாம் பெறவேண்டும்! வேறென்ன வேண்டும்?” எனத் தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சூரணத்தைக் கவிதைத் தேனில் கலந்து புகட்டிய பாவேந்தர் அவர்கள் மார்பு நோயினால் இறுதியெய்தினார்.
“மண்டைச் சுரப்பை உலகு தொழும்!” என்று பகுத்தறிவுப் பகலவனாம் அய்யா பற்றி அவர் அன்று தொலைப் பார்வையுடன் குறிப்பிட்டது வரலாற்றில் நடந்துவிட்டது என்பது மட்டுமன்று; அவ்வாறு கணித்த புதுவைக் குயிலையும் இன்று உலகம் ஆர்வம் பொங்கப் பாராட்டுகிறது! சுயமரியாதை இலக்கிய வரலாற்றில் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்றே ஒரு மரபு உருவாகி வளருமாறு செய்த கவிஞரின் இனப் புரட்சிக் குரல் 21.4.1964 அன்று ஓய்ந்தது.
வாழ்க புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்!