சிங்கப்பூர்த் தமிழர்கள் என்றால் வெறும் மூட்டை சுமக்கும் பாட்டாளிகள் எனக் கருதப்பட்ட தாழ்நிலை மாறி, அவர்கள் அறிவு சுமக்கும் படிப்பாளிகள் என்னும் தரமுயர்ந்த தகுதியடைந்து தன்மானத்துடன் வாழும் சூழ்நிலையினைப் படைக்க, அயராது பாடுபட்ட நற்றொண்டரும், சுயமரியாதை இயக்க வளர்ச்சிக்குத் தோள் கொடுத்துத் துணை நின்ற தோழருமான சாரங்கபாணியவர்கள் 11.5.1903இல் தோன்றினார்.
இளமையிலேயே இனவுணர்ச்சியால் உந்தப்பட்டு, தமிழினத் தலைவரால் இங்கு தோற்றுவிக்கப்பட்ட ‘மான அறிவு இயக்க’ அதிர்ச்சியலைகள் அங்கேயும் தாக்கவேண்டுமென விரும்பினார். அதற்கு அவர் உடனடியாகக் கையாண்ட வழி ‘குடிஅரசு’ இதழை அங்கு வரவழைத்ததுதான். எத்தனை இதழ்களை வரச்செய்தார் என்று கேள்விப்படும் எவரும் நம்பவே மறுப்பர். ஆம்; 1500 இதழ்களுக்கு ஆண்டுக் கட்டணம் பெற்றனுப்பினார் என்கிற உண்மை அந்தக் காலத்தில் நமக்கு வியப்பிலும் வியப்பாகப் படுகிறதல்லவா?
தாமே ‘முன்னேற்றம்’ ‘தமிழ் முரசு’ என்னும் இதழ்களை நடத்திச் சிங்கப்பூர் – மலேயா பகுதிகளில் வாழும் தமிழ்க் குடும்பங்களின் ஒருமைப்பாட்டு உணர்வினை வளர்த்தார்.
தமிழகத்தில் கட்டாய இந்தி முதன் முதலாகப் புகுந்த கட்டத்தில் சிங்கையிலுள்ள தமிழ்க்குடி மக்களிடம் “இந்தியை யார் எதிர்த்த போதிலும் கட்டாயம் வந்தே தீரும் எனக் கல்வி மந்திரி சுப்பராயன் திருநெல்வேலியில் கூறினார். இன்று கூடியிருக்கிற இக்கூட்டத்தினராகிய நாம் இந்திபாஷை தமிழ்நாட்டில் ஒழிந்தே தீருமெனக் கூறுகிறோம்” என்று முழங்கி வீரவுணர்ச்சியைத் தட்டி விட்டு, அவர்களை வினைப்பாட்டிலும் ஈடுபடுத்த இந்தி எதிர்ப்பு மறியலில் கலந்து கொள்ளுவதற்காகத் தமிழ் மறவர்களைக் கப்பலேற்றிச் சென்னைக்கு அனுப்பி வைத்தார் அவர்.
தந்தை பெரியாரவர்களை மலேயா அய்யாறு அவர்களுடன் இணைந்து திட்டமிட்டு, அங்கு வருகை தருமாறு ஏற்பாடு பண்ணி, அரிய விளைவுகளை உண்டாக்கினார். ‘தமிழர் சீர்திருத்தச் சங்கம்’ என்னும் அமைப்பொன்றை உருவாக்கி, அதன் மூலம் பல நன்மைகளைப் படைத்துக் காட்டினார். அவரின் தொண்டுக்கு இங்குள்ள நமதியக்கத் தோழர்கள் எத்துணை உயர்ந்த மதிப்பளித்தனர் என்பதற்கு, 1938 இல் தமிழகம் வருகை தந்த அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து, ‘குடிஅரசு’ சந்தா சேர்ப்பதற்காக மலாய்-சிங்கைப் பகுதிகட்குச் சென்று திரும்பிய நாகை என்.பி. காளியப்பனவர்கள் 06.03.1938 ‘குடிஅரசு’ ஏட்டில் விடுத்துள்ள அறிக்கை நன்கு விளக்கும்.
‘தமிழவேள்’ என்றழைக்கப்பட்ட சாரங்கபாணியவர்கள் 16.03.1974 அன்று இறுதியுற்றபோது ‘விடுதலை’யின் துணைத் தலையங்கம், “நம் நெஞ்சங்களைத் தாக்கிய பேரிடி போன்ற செய்தியாகும்” என்று இரங்கலுரை பதிவு செய்தது.
‘தமிழவேள்’ சாரங்கபாணி வாழ்க!