தமிழகத்தின் தலை நகரில் இயக்க வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட வீரர்களில் ஒருவரான ஜீவரத்தினம் அவர்கள் 11.11.1911இல் சென்னையில் பிறந்து இயக்கத்தில் இரண்டாம் கட்ட வரலாற்றில் தம்மை இணைத்துக் கொண்டவர். முதலாம் இந்தி மறுப்பு அறப்போர் நடத்தப்பட்ட காலத்தில் போருக்குப் படைவீரர்கள் திரட்டித் தருவதில் இவருக்கு நல்ல பங்குண்டு. பெல்லாரிச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுத் திரும்பிய தமிழினத் தலைவருக்கு இராயபுரத்தில் இவரால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு விழா நெஞ்சைத் தொடும் நிகழ்ச்சி!
இவரின் சுறுசுறுப்பையும் செயலாற்றலையும் உணர்ந்த இயக்கம் இவரைச் சென்னை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவராகப் பொறுப்பேற்கச் செய்தது. இராஜகோபாலாச்சாரிக்குக் கருப்புக் கொடி காட்டும் கிளர்ச்சியின்போது காவல்துறையினரின் கடும் தடியடிக்கு இலக்காகிக் குருதி சிந்தினார்.
நல்ல பேச்சுத்திறன் படைத்த இவர் மாநகராட்சி உறுப்பினராயும் மீனவர் தொழிற்சங்கத் தலைவராயும் மக்கள் தொண்டு புரிந்தார். 1949இல் அய்யாவை விட்டு நீங்கினாரெனினும் 25.12.1972அன்று மறையும் வரை சுயமரியாதைக்காரராகவே வாழ்ந்தார்.
ஜீவரத்தினம் வாழ்க!