தேடிப் படிப்போம்!
ஏருக்குப் பின்னாலே
ஏர் செல்லும்
அழகாக
ஈரோட்டுக்
கிழவனது
இயக்கத்தைப் பின்பற்ற
ஊருக்கு
ஒரு கிழவன்
ஓடி வந்திருக்கா
விட்டால்…
இங்கே…
ஓடியிருக்குமோடா… அந்த
மூத்திரத்
தட்டமும்! இந்தச்
சூத்திரப்
பட்டமும்!
அது..
ஒற்றைக் கிழவனது
வெற்றியா..
இல்லை… இல்லை…
அந்த ஒற்றைக் கிழவனது
ஒப்பற்ற
மூளையின்
உயரிய
கட்டளைக்கு
தம்மை அப்படியே அர்ப்பணித்த
ஆயிரமாயிரம்
கிழவன்களது
அளப்பரிய
வெற்றியடா
அது!
அன்னைமுகம் பார்க்காமல்
அவர்பின்னே
அலைந்தவர்கள்…
ஊர் ஊராய்
தொடர்ந்ததனால்
ஊருக்குத்
தொலைந்தவர்கள்…
மனைவிபெயர் மக்கள்பெயர்
மனசறிய
மறந்தவர்கள்..
சொத்து சுகம்
அத்தனையும்
தூசாகத்
துறந்தவர்கள்
கறுப்புச் சட்டைகளை
மட்டுமல்ல
கருத்துக்
கிழவனின் மீதான
காதலையும்
கடைசீ வரை
கழட்டாமல் வாழ்ந்து செத்த
அந்தக்
கிழட்டுப் பயல்களது
முரட்டுக்
கொள்கை மட்டும்
மோதாமல்
இருந்திருந்தால்
முற்றிலும் சாய்ந்திருக்குமோடா
இந்த
மூடநம்பிக்கைகளின்
கோட்டை!
அத்தனைக்
கிழவன்களது
படங்களையும் மாட்ட
ஆணிகள்
அடிக்க
இதயச் சுவரில்
இடம்
இல்லை
என்பதனால்…
அந்த ஒற்றைக் கிழவனது முகத்தில்
அனைவரையும்
உள்ளடக்கி… மாட்ட
ஒரே ஒரு ஆணியை
உள்ளத்தில் அடிப்போம்!
அந்த
உயரிய கிழவன்களது
உழைப்பை
ஊர் ஊராய்த் தேடிப்
படிப்போம்!
- பாவலர் அறிவுமதி