தமிழின வரலாற்றில் சிந்தைக்கினிய விந்தைத் தலைவராக விளங்கிய பன்னீர்செல்வம் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தில் அய்யாவின் தொண்டராகத் தம்மைக் காட்டிக் கொள்ளுவதிலேயே பெருமிதங்கொண்டவர்.
தஞ்சை மாவட்டத்தின் செல்வபுரத்தில் 8.1.1888இல் பிறந்த இவர் திருச்சியில் பட்டப் படிப்பும் லண்டனில் ‘பார்-அட்-லா’ (வழக்குரைஞர்) கல்வியும் முடித்து, தென்னிந்திய நலவுரிமைச் சங்க முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் தம் தீவிர இனவுணர்வுத் தொண்டினால் உயர்ந்திருந்த கட்டத்தில், காங்கிரசை விட்டு வெளியேறி வந்த அய்யா அவர்களின் அருமையினை ஏற்கெனவே நன்கு தெரிந்து வைத்திருந்ததால் அய்யாவின் மீது அன்பும் அவர்தம் செயல்களின் மீது ஆர்வமும் காட்டித் தம்மை அவரின் உற்ற நண்பராக்கிக் கொண்டார்.
செங்கற்பட்டு முதலாம் சுயமரியாதை மாநாட்டில், சுயமரியாதை இயக்கத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தந்தை பெரியாரின் பெரும் பணிக்குத் தோள் கொடுக்கும் தோழரானார். தொடர்ந்து நாட்டிலே பத்து ஆண்டுகளாகப் பார்ப்பனியத்தின்மீது இயக்கம் நடத்திய பலமுனைத் தாக்குதல்களில் சுழன்று பங்காற்றினார்.
தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர், மாவட்டக் கல்வி மன்றச் செயலர், தஞ்சை நகராட்சி மன்றத் தலைவர், சென்னை அரசின் உள்நாட்டு அமைச்சர், இடைக்கால அரசின் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருக்க நேர்ந்த செல்வம், தமிழினத்தைக் கைதூக்கிவிடும் எண்ணற்ற செயல்களைச் செய்தார்.
சில ஊர்களில் பார்ப்பனப் பிள்ளைகட்கே ‘உடைமை’யாக்கப் பட்டிருந்த பள்ளிகள் கல்வி உணவு விடுதிகளில் நமது இனத்தின் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்கும் பெரும் உரிமை வழங்கினார்.
திருவையாற்றில் அமைந்த ‘ராஜா சமஸ்கிருதக் கல்லூரி’ என்பதில் தமிழ்க் கல்வியைப் புகுத்தி, திராவிட மாணவர் உள்ளே நுழையும் வாய்ப்பை ஏற்படுத்தினார்.
தாம் பொறுப்பேற்ற பதவிகளை, எண்ணற்ற பார்ப்பனரல்லாத படித்த இளைஞர்களை வேலைகளில் அமர்த்துவதற்கே பயன்படுத்தினார். இவற்றுக்கெல்லாம் அய்யாவே அடிப்படை என்று அறிவித்தார்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த, உள்ளத்துள் பாயும் சொற்களைப் பயன்படுத்திப் பேசும் வன்மையாளர். “அநேக நூற்றாண்டுகளாக இருந்திருந்தும் நம்முடன் கலவாமல் தங்களை ஒரு தனிப்பட்ட வகுப்பினராகவே வைத்துக் கொண்டது மாத்திரமல்லாமல், தாங்களே ஏனையோரைவிட மேல் வகுப்பினர் என்று சொல்லிக் கொண்டு, தம் சொந்த மொழி, வடமொழியாகிய சமஸ்கிருதமே என்றும், அம்மொழி தமிழ் மொழியைவிட மேம்பட்டதென்றும் இழிவுபடுத்திப் பேசுபவர்கள் எவ்விதத்தில் தமிழரென்று அழைக்கப்படப் பொருத்தமானவர்கள்?” என்று 1938இல் வேலூர்த் தமிழர் மாநாட்டில் செல்வம் அவர்கள் பேசியதன் விளைவாக, அதுவரை அரசியலில் பிரிந்திருந்த ராஜகோபாலாச்சாரியாரும் சீனிவாசய்யங்காரும் இணைந்து சென்னைக் கடற்கரையில் கூட்டம் போட்டு ஓலமிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்!
இயக்கத்திற்காக வழக்கு மன்றத்திலும் பலமுறை வாதாடியிருக்கிறார் நம் பன்னீர்செல்வம். இயக்கத் தொண்டர்தம் இல்லங்கட்கெல்லாம் வலியச் சென்று சமமாகப் பழகி, அன்பு மொழிகள் செப்பி ஊக்குவித்தார்.
இயக்கத்தவர் எவரையும் ‘தோழர்’ என்று அழைப்பதைப் பெரிதும் விரும்பினார்.
சுயமரியாதை மாநாடுகளிலும், நிகழ்ச்சிகளிலும், முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டப் பொதுக் கூட்டங்களிலும் சட்டமன்ற நடவடிக்கைகளிலும் செல்வம் அவர்கள் ஆற்றியிருக்கும் உரைகள் இலக்கியத் தரம் படைத்தவை.
தந்தை பெரியாரவர்களிடம் செல்வம் வைத்திருந்த பற்றும் மதிப்பும் எவருக்கும் வியப்பூட்டுவதாகும். பெல்லாரிச் சிறையில் அய்யா இருக்கையில், சென்னையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாட்டில், அய்யா அவர்கள் எழுதியனுப்பிய தலைமையுரையைப் படிக்க வந்த செல்வத்திற்குப் போடப்பட்ட மாலையை, “இதற்கு உரியவன் நானல்லன்.
எனவே, என் தோளுக்கிட்ட மாலையைப் பெரியாரின் தாளுக்கு இடுகிறேன்” என்று கூறி, அய்யா உருவப்படத்துக்கு அம்மாலையை அவர் சூட்டியது பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் என்றால், தம் இல்லத்துப் பணியாளர்களிடம், “வீட்டில் எந்த இடத்திலும் எந்தப் பக்கமும் நான் பார்க்கும்போது என் முன்னே பெரியார் படம்தான் தெரியவேண்டும்” என இவர் அறிவித்த செய்தி, இவரின் ‘வெறி’யைக் காட்டும்.
இத்தகைய திராவிடச் செம்மல் இங்கிலாந்து அரசில், இந்தியச் செயலாளரின் ஆலோசகராக அமர்த்தப்பட்ட நிலையில், 1.3.1940 அன்று இலண்டனுக்கு இவர் ஏறிச் சென்ற ஹனிபால் என்னும் இம்பீரியல் (விமானம்) வானூர்தி வழியிலேயே மறைந்துவிட்டதால், நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டார்.
“பன்னீர்ச்செல்வமே! காலஞ் சென்று விட்டாயா?” என அய்யா அவர்கள் வரைந்த கண்ணீர்க் கட்டுரை படித்துப் படித்துக் கருதிப் பார்த்தற்குரியது.
“மிஞ்சுமவன் பெரியபுகழ் மறைவ தில்லை
மிகுதமிழர் அவன்நன்றி மறப்ப துண்டோ?”
– புரட்சிக் கவிஞர்
வாழ்க பன்னீர்செல்வம்!