சி.டி.நாயகம்

  • சென்னைக்கு வந்து சர்.பிட்டி. தியாகராயரின் தாளாளராயிருந்து நடத்தி வந்த ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தென்னிந்திய நலவுரிமைச் சங்கப் பற்று  மேவியவராய், அதன்வழி சமுதாய மறுமலர்ச்சி படைக்கப் பாடுபடும் சுயமரியாதை இயக்க ஈடுபாடும் கொண்டார்.
  • மூட நம்பிக்கைகளை உடைப்பது, பெண்ணுரிமை பேணுவது, பின்தங்கிவிட்டவர்களின் கல்வி ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதிலேயே குறியாகயிருந்தார். தம் சிக்கன வாழ்க்கையின் பயனாகக் கிட்டிய பொருளையெல்லாம் கல்விக்கூடங்களை அமைத்து நம் இனமக்களுக்குப் பயன்படுமாறு செலவிட்டார்.
சி.டி.நாயகம்

அய்யா அவர்களது அடிநாள் தோழராக, தொண்டராக, நன்னம்பிக்கைக்குரியவராக வாழ்ந்த பெருந்தகையாளர் தெய்வநாயகம் அவர்கள், நெல்லை மாவட்டக் குலசேகரன் பட்டினத்தில் 7.10.1878இல் பிறந்து அவ்வூரிலேயே கல்வி கற்றவர்.

சென்னைக்கு வந்து சர்.பிட்டி. தியாகராயரின் தாளாளராயிருந்து நடத்தி வந்த ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தென்னிந்திய நலவுரிமைச் சங்கப் பற்று  மேவியவராய், அதன்வழி சமுதாய மறுமலர்ச்சி படைக்கப் பாடுபடும் சுயமரியாதை இயக்க ஈடுபாடும் கொண்டார்.

தம் சொந்த முயற்சியால் சென்னையில் பொருளியற் கல்வி பெற்று, கூட்டுறவுத்துறை உதவிப் பதிவாளர் பதவியில் அமர்ந்து, தம் நிலையை நன்கு பயன்படுத்தி, நம் இன மக்களுக்கு என்னென்னவெல்லாம், எப்படியெப்படியெல்லாம் செய்யலாமோ அவற்றைச் செய்து காட்டினார். அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற மறுநொடியே தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தம்மை ஒப்படைத்துக் கொண்டார்.

அய்யா கருத்துகளைச் சொல்லிவிட்டால், நாயகம் அதை விளக்கிச் சொல்வார்; அதற்கு ஆதாரங்கள் விநாடியில் சேர்த்து விடுவார்.

சுயமரியாதை மணங்கள் அவரால் நிறைய நடத்தப் பெற்றன. பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இயக்கக் கொள்கைகட்கு அருமையான விளக்கங்கள் கொடுத்தார். முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் ‘சர்வாதிகாரி’யாகப் பொறுப்பேற்று நடத்தி வரலாற்றுக் கீர்த்தியை அடைந்தார். இப்போரில் கைதாகி 18 மாதச் சிறை வாழ்க்கைப்பட்டு, தம் உடல் நலம் பெரும் கேடுற்றும் இயக்கப் பிணைப்பைத் தளர்த்திக்கொள்ள நாயகம் முனைந்தது கிடையாது.

மூட நம்பிக்கைகளை உடைப்பது, பெண்ணுரிமை பேணுவது, பின்தங்கிவிட்டவர்களின் கல்வி ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதிலேயே குறியாகயிருந்தார். தம் சிக்கன வாழ்க்கையின் பயனாகக் கிட்டிய பொருளையெல்லாம் கல்விக்கூடங்களை அமைத்து நம் இனமக்களுக்குப் பயன்படுமாறு செலவிட்டார்.

அய்யா-மணியம்மையார் திருமணம் என்ற எதிர்காலம் பற்றிய தொலைநோக்குள்ள ஏற்பாடு திட்டமிடப்பட்ட போது, அந்தத் திருமணப் பதிவு நடத்தப்படத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் நாயகம் அவர்களின் இல்லம்தான்.

தம் வாழ்நாள் முழுதும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கட்காகவே உழைத்து வந்த நாயகம் 13.12.1944இல் இயற்கை எய்தினார். அவரது உருவச்சிலையொன்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள ‘தியாகராயர் உயர்நிலைப்பள்ளி’யின் முன்னால் நிறுவப்பட்டுள்ளது.

நாயகம் வாழ்க!

மேற்கண்ட சுயமரியாதைச்  சுடரொளியை குறித்து ஒளிப்படங்களோ, பிற தகவல்களோ உங்களிடம் இருப்பின் அதை அனுப்பி இப்பக்கத்தை மேம்படுத்த உதவுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, viduthalai.editorial@gmail.com 

Share

Share on Facebook
Share on Twitter
Share on Whatsapp
Send by Email

உங்கள் வீர வணக்கத்தை செலுத்துங்கள்