10.3.1920இல் வட ஆர்க்காடு மாவட்டம் வேலூரில் திரு. கனகசபை – திருமதி. பத்மாவதி ஆகியோரின் செல்வியாகப் பிறந்து தந்தை பெரியாரின் அருந்துணைவியார் அன்னை நாகம்மையார் மறைவினால் அய்யா வாழ்விலும், இயக்க வரலாற்றிலும், உண்டாகிவிட்ட வெற்றிடத்தை வியக்கத்தகு வகையில் நிரப்பி, இயக்கத்தையே காப்பாற்றிய தனிப்பெருமையை ஈட்டிக்கொண்டவர் அன்னை மணியம்மையார். காந்திமதி எனும் இயற்பெயருடைய அம்மையார் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் தமிழ்ப் புலவர் படிப்பும் பெற்றார்.
அம்மையாரின் தந்தையார் திரு. கனகசபையவர்கள் சுயமரியாதைக் கருத்துகளில் பற்றும், அய்யா மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவராதலால் அம்மையாரும் சிறுபருவம் முதலே இயக்கத்தின் மீது ஆழ்ந்த பற்றும் தந்தை பெரியாரின் மீது பெருமதிப்பும் கொண்டவராய், இல்லச் சூழ்நிலையிலேயே சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதில் நல்ல ஆர்வம் காட்டினார். கனகசபையார், அய்யா அவர்களுக்கு, அடிக்கடி “உடம்பைப் பத்திரமாகக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று எழுதிக் கொண்டிருப்பார். ஒருமுறை அவர் அப்படி எழுதியிருந்தபொழுது, “எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள், ஆனால், கூட இருந்து உதவி செய்ய யாரும் இல்லை. என்னமோ என் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றேன்” என அய்யா எழுதிவிட, அதைப் படித்ததும் மளமளவென்று தம் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து, “இந்தப் பெண் தங்கள் கூட இருந்து தொண்டு செய்யட்டும்” என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.
அன்னை நாகம்மையார் மறைந்து பத்தாண்டு இடைவெளிக்குப்பின் அய்யாவின் வாழ்க்கையில் ஒரு புதிய சூழ்நிலை தோன்றியது. அய்யாவின் தொண்டர், தோழர், செயலாளர், செவிலியர் என்று பல்வேறு நிலைகளிலும் கடமையாற்ற முன்வந்த மணியம்மையார் அவர்கள் அய்யாவுக்குத் தக்க ஊன்றுகோலாகப் பயன்பட்டார்.
அய்யாவின் உடல் நோய்த் தொல்லைகளால் விளைந்த துன்பம், “உடுக்கை இழந்தவன் கை” போன்று அம்மாவின் விரைந்த கவனிப்பு, கண்டிப்பான உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றால் மட்டுப்பட்டது.
“அய்யாவைக் கடந்த முப்பதாண்டுகளாகக் கட்டிக்காத்து, அவரை நோயின்றி உடல்நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை அந்த அம்மாவைச் சாரும்” எனப் பேரறிஞர் அண்ணாவே உள்ளந் திறந்து பாராட்டும் வண்ணமாக அமைந்தது அம்மாவின் பராமரிப்பு.
“அவர் தொண்டுக்கு முழுக்க முழுக்க என்னை ஆளாக்கி, அவர் நலத்தைக் கண் எனப் பாதுகாக்க ஒரு தாயாக என்னைப் பாவித்துக் கொண்டு, அவரை ஒரு சிறு குழந்தையாகவே என் மனதில் இருத்தி அக்குழந்தைக்கு ஊறு நேரா வண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கண்டேன்” அம்மையாரின் சொந்தக் கூற்று இது.
இயக்கத் தொண்டர்கட்கும் அய்யாவுக்கும் செய்தித் தொடர்பு ஏற்படுத்தும் செயலாளராகப் பணிபுரிந்தார் அம்மா. பண வரவு செலவுகளைக் கணக்கிட்டு வைத்தார். பேச்சு-எழுத்துக் குறிப்புகளைத் தொகுத்தார்.
“அம்மா என்னிடம் தொண்டராக வந்த பிறகுதான் என்னுடைய கருத்துகள் பல ஆயிரம் புத்தகங்களாக வெளிவர முடிந்தது” என்பது அய்யா அவர்கள் புகழ்ந்தளித்த ஏற்புரை!
பொதுக்கூட்டங்களின் போதும் மாநாடுகளின் போதும் அம்மா ஓர் ஓரத்தில் அடக்கமாகத் தரையில் அமர்ந்து, இயக்க ஏடுகளை விற்ற காட்சியைப் பற்றி நாடே வியந்தது! வடநாட்டு இதழ்கள் அதனை ஒரு விந்தையாகக் கருதியெழுதின.
அன்னை நாகம்மையாரைப் போலவே, இயக்கத் தோழர்கட்குப் பரிவோடு உணவளித்து, தாயன்பைப் பொழிந்தார் அம்மா.
சுயமரியாதைப் பிரச்சார அமைப்பைத் தம் சொந்த சொத்துகள், பொதுமக்களின் நன்கொடைகள் ஆகியவற்றைக் கொண்டு சட்டப்பதிவு செய்துவிட வேண்டுமென்று திட்டமிட்ட அய்யா அவர்கள் நிறுவனத்திற்கு மணியம்மையார் மூலமாக ஒரு பாதுகாப்பு உண்டாக்கும் நோக்கத்தில் அவரைத் தம் வாரிசாகச் செய்திடும் திருமணம் என்கிற ஏற்பாட்டினை முடித்தார். அய்யாவின் தூய எண்ணத்தையும், நன்னோக்கத்தையும் செம்மையாக உணர்ந்திடும் பக்குவம் பெற்ற அம்மா அவர்கள் தம்முடைய இணக்கத்தைத் தந்தார். 9.4.1949 அன்று திருமணம் பதிவு செய்யப்பட்டது.
அதன் விளைவாக உலகில் எந்தப் பொது வாழ்க்கைப் பெண்மணியும் சந்தித்திருக்க முடியா ஏச்சுப் பேச்சுகளையும் பழி மொழிகளையும் அம்மையார் உவமை காட்டவொண்ணாப் பொறுமையோடு ஏற்றுக் கொண்டார்.
இயக்கத்திற்கு அம்மா அவர்கள் பல்வேறு கட்டங்களில், பல்வேறு நிலைகளில் புரிந்துள்ள தொண்டுகள் தனி நூலாக எழுதப் பெற வேண்டியவையாகும்.
1944இல் சேலத்தில் முதல் திராவிடர் கழக மாநாட்டு மேடையில் தம் முதல் பேச்சைத் தொடங்கிய அம்மையார் பின்னர் கணக்கிறந்த மேடைகளில் தம் இனிய குரலில் தனித் தன்மை வாய்ந்த சொல்லாட்சியுடன் உரை நிகழ்த்தி நிறையப் பயன் குவித்தார்.
சுயமரியாதை – திராவிடர் கழக – திராவிட மகளிர் மாநாடுகளில் கலந்து கொண்டு அவர் பேசிய சொற்பொழிவுகள் அவரது அறிவுத் திறனை அழகாக வெளிப்படுத்தின!
எழுதுவதிலும் அம்மா அவர்களின் தகுதி தனிச்சிறப்பு வாய்ந்தது. 1944இல் அவர் “குடி அரசு” ஏட்டில் எழுதிய “இரண்டும் ஒன்றே” என்னும் “கந்த புராண – இராமாயண” ஆராய்ச்சிக் கட்டுரை இதற்கு நல்ல சான்று, அவரால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் சில படிப்போர் கண்களை நீர்த்தேக்கமாக்கிவிடும்; சில குருதியில் கொதிப்பேற்றிவிடும்; மன ஆறுதல் ஊட்டி விடுபவை சில; மகிழ்ச்சி வெள்ளத்தில் தள்ளிவிடுபவை சில. அத்துணை ஆற்றல் படைத்தவை அவர்தம் எழுத்துகள்.
அய்யா அவர்களின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இயக்க நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அம்மா பங்கு கொண்டார்.
அடக்கமே உருவமான அன்னையார் தேவை ஏற்படும்போதும் சிறையேகவும் அஞ்சாத தம் மறப்பண்பை வெளிப்படுத்தினார். 1948இல் கும்பகோணத்தில் அரசு போட்ட தடைச் சட்டத்தை மீறி மூன்று மாதம் சிறைக் கூடம் ஏற்று இயக்கத்தவர்க்கே வியப்பையும், விம்மிதத்தையும் அவர் உண்டாக்கினார். 1949இல் சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை முன்னின்று நடத்தினார்.
வீரத்தின் ஊற்றிடமாக அம்மா விளங்கினார் என்பதைக் காட்டும் நிகழ்ச்சியொன்று:
ஜாதியொழிப்புப் போராட்டத்தின் ஒரு கட்டமாகத் தலைவர் பெரியாரவர்களின் கட்டளையேற்று 3000 கழகத் தொண்டர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் ஜாதிப் பாதுகாப்புப் பிரிவுகளைப் பொதுவிடங்களில் தீயிட்டு சாம்பலாக்கிச் சிறை சென்றனர். தந்தையும் சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்தச் சூழ்நிலையில் அம்மா அவர்கள் வெளியிலிருந்து கழகத்தின் பொறுப்புகளை நிறைவேற்றி வருவார் என்பது அய்யாவின் அறிக்கை. அப்போது திருச்சி மத்திய சிறையில் வதிந்து வந்த இயக்கத் தோழர்கள் பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய இருவரும் சிறையதிகாரிகளின் கொடுமைப் போக்கினால் மடிந்து விட்டார்கள். அவர்களில் வெள்ளைச்சாமியின் சடலத்தை மட்டும் வெளியே தருவதற்கு இசைந்த சிறையதிகாரிகள் இராமசாமியின் சடலத்தை ஒப்படைப்பதற்கு மறுத்தனர். சென்னையிலிருந்து திருச்சி சென்ற அம்மா அவர்கள் சிறையதிகாரிகளைச் சந்தித்துக் கேட்டும் அவர்கள் விடாப்பிடியாக மறுத்து விட்டார்கள். சினம் பொங்கிற்று அம்மையாருக்கு! சீறி எழுந்தார்! “என்ன நேர்ந்தாலும், எங்கள் இராமசாமியின் உடம்பை வாங்காமல் விடப்போவதில்லை நாங்கள்!” எனச் சூளுரைத்துவிட்டு மறுநொடியே சென்னைக்குக் கிளம்பினார். முதலமைச்சர், உள்துறை அமைச்சர், சிறை மேலதிகாரிகள் ஆகியோரை நேரில் சந்தித்து, தேவையான கட்டளைகளைப் பிறப்பிக்குமாறு செய்து, திரும்பவும் திருச்சிக்குச் சென்றார். அங்கு நள்ளிரவிலேயே இராமசாமியின் உடலைப் புதைத்து விட்ட அதிகாரிகள், அம்மாவின் தீவிரமான விடாமுயற்சியின் விளைவால் புதை குழியிலிருந்து தோண்டி எடுத்துக் கொடுக்க, இரு தோழர்களின் உடல்களையும் தாமே தலைமையேற்று ஊர்வலமாகக் கொண்டு சென்று, வீரவணக்கம் புரிந்து அடக்கம் செய்தார்.
19.1.1958 அன்று ‘விடுதலை’யில் வெளியான “இளந்தமிழா, புறப்படு போருக்கு!” என்னும் கட்டுரைக்காக இதழைப் பதிப்பித்து வெளியிடுபவர் எனும் முறையில் அம்மாவுக்கு ஒருமாத சிறை வாழ்வு அளிக்கப்பட்டது.
திருச்சியில் அய்யா நிறுவிய கல்வி நிலையங்களையும் காப்பகத்தையும் சீரிய வகையில் பராமரித்து, தமது நிருவாகத் திறமையினை நிலை நாட்டியவர் அம்மையார். காப்பு இல்லத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெண் குழந்தை ஒவ்வொன்றின் எதிர்கால நல்வாழ்வுக்கென்று வங்கியில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் போட்டுப் பயன்படுமாறு செய்த அன்னையின் அருளுள்ளமும் திட்டமிடும் பாங்கும் வெளியான போது மகிழ்ச்சிக் கண்ணீர் பெருக்காதோர் எவருமிலர்!
தமிழருக்கு மானம் ஊட்டிய தந்தை, 1973 டிசம்பரில் நிலையான ஓய்வெடுத்துக் கொண்டபோது இயக்கத்தின் எதிர்காலம் பற்றி வினா எழுப்பியோருக்கு “அய்யா அவர்கள் ஒவ்வொன்றிற்கும் நல்ல வழிமுறைகள், செயல் திட்டங்கள், கொள்கை விளக்கங்கள், பயிற்சிகள் நமக்குத் தந்துவிட்டே சென்றிருக்கின்றார்கள். அதன்படியே ஒரு நூலிழை கூடப் பிறழாமல் இயக்கம் நடக்கும்” என்று அம்மா உறுதி கூறினார். அவ்வாறே “திரும்பி வருகின்றேன்” என்னும் உள்ளத்தை உலுக்கி எடுக்கும் அறிக்கையொன்றினை வெளியிட்டுவிட்டு அய்யா தம் சுற்றுப்பயணத்தை எந்த இடத்தில் விட்டார்களோ, அந்த இடமாகிய திருவண்ணாமலையிலிருந்தே அம்மையார் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.
நாடெங்கிலும் சென்று, உறுதி நாள் பொதுக் கூட்டங்கள் நடத்தித் தொண்டர்களுக்குப் புத்துணர்ச்சியூட்டி, இயக்கத்தின் கட்டுக்கோப்பை நிலைப்படுத்தி, தம் தலைமைத் தகுதியை மெய்ப்பித்தார்.
சுயமரியாதை நிறுவனத்திற்குரிய சொத்துகள் போக, அய்யாவால் தம் பெயரில் எழுதி வைக்கப்பட்ட உடைமைகளையும் இயக்கத்தின் பொதுச்சொத்தாகவே மாற்றி பிறர்க்கென வாழும் வெற்றியென்பது இதுதான் என இலக்கணம் வகுத்துக் காட்டினார் அன்னையார்!
இழிவு ஒழிப்புக்காகக் கிளர்ச்சிகள் நடத்த வேண்டுமென்று அய்யா திட்டமிட்டிருந்தபடி அம்மா போராட்டத் திட்டங்களை வகுத்தார். அஞ்சலகங்களின் முன்பாக மறியல் என்பதை முதற்கட்டக் கிளர்ச்சியாக அறிவித்தார். 3.4.1974 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களின் முன் ஆயிரக்கணக்கான இயக்கத் தொண்டர்கள் மறியல் செய்தனர். தனிச்சிறப்பு என்னவென்றால் இக்கிளர்ச்சியில் எண்ணற்ற தாய்மார்கள் ஈடுபட்டதே! சென்னையில் அம்மையாரே தலைமை தாங்கி மறியலை நடத்தினார்.
இரண்டாம் கட்டக் கிளர்ச்சி தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கட்குக் கருப்புக்கொடி காட்டுதல் என்பது. அதற்கேற்ப அம்மா அவர்களின் ஆணைப்படி சென்னை வந்த இந்திய அமைச்சர்களுக்கு இயக்கத் தோழர்களும் தோழியர்களும் கருப்புக்கொடி காட்டினார்கள். இவ்வாறு தமிழினத்தை எப்போதும் விழிப்போடும் எழுச்சியோடும் வைத்திருப்பதில் அம்மையார் நல்ல வெற்றி கண்டார்.
இந்திய நிலத்தையே ஒரு பெருங் குலுக்குக் குலுக்கி, பாரையே பரப்பரப்புக்குள்ளாக்கிய வீர நடவடிக்கை ஒன்றினை அம்மையார் நிகழ்த்தினார். அதுதான் “இராவணலீலா” எனும் பெயரில் ஆரிய இராமனின் போலி உருவத்திற்குத் தீயிட்ட விழா!
26.10.1974 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்கட்கும் இந்தியத் தலைமையமைச்சர் இந்திராகாந்தி அவர்கட்கும் “திராவிட மாவீரன் இராவணனை எரிக்கும் இராமலீலா நிகழ்ச்சியில் தாங்கள் பங்கு கொள்வது மதச் சார்பின்மைக் கொள்கைக்கு முரணானது மட்டுமன்று; பல இலட்சக்கணக்கான திராவிட மக்களை அவமானப்படுத்தி ஆத்திரமூட்டும் செய்கையாகும். எனவே, இந்தக் கொடூரமான நிகழ்ச்சிக்குச் செல்லக்கூடாது; மீறியும் அதில் பங்கு கொள்ளுவீர்களானால், பல லட்சக்கணக்கான திராவிட மக்கள் தமிழ் நாடெங்கிலும் இராமன் உருவத்திற்குத் தீயிட்டுக் கொளுத்த நேரிடும்” என்பதாகத் தந்தி கொடுத்தார் அம்மா. ஆனால், இந்திராகாந்தி தருக்கோடு இந்த வேண்டுகோளைத் தள்ளிவிட்டார். அன்னையார் அப்போது மருத்துவமனைப் படுக்கையிற் கிடந்தாலும், “நமது இயக்கத் தோழர்கள், பகுத்தறிவுவாதிகள் இவர்களைக் கூட்டி, இன எழுச்சிப் பெரு விழாவாக “இராவண லீலா” நடத்தி அதில் நாம் திட்டமிட்டபடி காரியங்களைச் செய்தே தீர வேண்டிய நிலையில் இருக்கிறோம்” என அறிவித்தார். அலறியது ஆரியம் ! நிகழ்ச்சியை நிறுத்துமாறு செய்யப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும், அம்மா உறுதி தளராமல் திட்டமிட்டவண்ணமே விழாவைச் சென்னையில் ஏற்பாடு செய்தார். 25.12.1974 அன்று தலைநகரில் திராவிட இனமே திரண்டிருந்தது. மாலை 6:50 மணிக்கு இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோர் உருவங்களுக்கு அன்னையார் தம் கையாலேயே தீயிட்டு நம் இயக்கத்தவர் யார் என்பதை உலகிற்குப் பறையறிவித்து தம் தோழர்களுடன் சிறைபுகுந்தார்.
31.1.1976 அன்றிரவு திருமதி. இந்திராகாந்தியாரால் தமிழ் நாட்டு அரசைக் கலைக்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டு, நெருக்கடி நிலையென்னும் ஆட்கொல்லிச் சட்டத்தின் பெயரால் திராவிடர் கழகத் தோழர்கள் நாடெங்கிலும் சிறைப்பிடிக்கப்பட்டுக் கொடுமைகளுக்கு இலக்கானார்கள். இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து இப்படி ஒரு சூழ்நிலைக்கு உள்ளானதில்லை. ‘விடுதலை’யில் “தந்தை பெரியார்” என்று எழுதக்கூடாது என்றும், அதேநேரத்தில் சங்கராச்சாரி என்னும் பெயருடன் “ஆர்” என்னும் மதிப்பு விகுதியைச் சேர்த்தே அச்சாக்க வேண்டுமென்றும் அச்சுறுத்தினார்கள் ஆரியத் தணிக்கையதிகாரிகள். அவ்வாண்டில் அய்யா பிறந்தநாள் விழாவையே தடைசெய்து அம்மாவையும் அடைத்து வைத்தது ஆணவ ஆளுநர் அரசு!
சரியான அறைகூவலாக வாய்த்துவிட்ட இந்தக் கட்டத்தில் அம்மா சோர்ந்துவிடவில்லை; அடங்கிவிடவில்லை. சிலிர்த்து அரிமாவெனக் கிளம்பினார். கலந்துரையாடல் கூட்டங்கள் எனும் பெயரிலும் வாழ்க்கையொப்பந்த விழாக்கள் என்ற நிமித்தத்திலும் நாட்டின் எல்லாப் பகுதிகட்கும் பயணம் செய்து, இயக்கத் தொண்டர்களைச் சந்தித்து விளக்கவுரைகள் தந்து, உணர்வுகளை உயிர்ப்பு நிலையில் வைத்தார். சிறைக்குள்ளிருந்த வீரர்களின் குடும்பங்களின் உறுப்பினர்களைக் கண்டு ஆறுதலும் ஊக்கமும் அளித்தார்.
அம்மாவின் இறுதிக் கிளர்ச்சியாகவும் அவர்தம் வீரத்தின் முடியாகவும் அமைந்தது இந்திராகாந்திக்குக் கருப்புக்கொடி காட்டும் நிகழ்ச்சி. இந்திராகாந்தி 30.10.1977 அன்று சென்னை வரும்போது நமது வெறுப்பைக் காட்டும் அறிகுறியாகக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கழகம் தீர்மானித்தது. கழகத்தின் பொதுச் செயலாளரின் தலைமையில்தான் ஆர்ப்பாட்டம் ஏற்பாடாகியது. ஆனால், தமிழ்நாடு அரசு அதனை குடியாட்சிப் பண்புக்கு முரணாகத் தடை செய்தமையால் அம்மா அவர்கள் திருச்சி மருத்துவமனையிலிருந்து நேராகச் சென்னைக்கு வந்து, தாமே ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்க முடிவெடுத்துக் களம் புகுந்து கைது செய்யப் பெற்றார். அப்போது நாகரிகத்தின் அணுவளவு வாடைகூட இல்லாமல் நடந்து கொண்ட காவல் துறையதிகாரிகளிடம் அன்னையார் காட்டிய துணிச்சல் கண்டோர்-கேட்டோர் அனைவரையும் மலைப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.
அய்யா மறைந்தபிறகு கடுமையான உடல்நலக் கேட்டிற்கிடையே தான் அம்மா அத்தனை வினைகளையும் மேற்கொண்டார் என்பது உள்ளம் நெகிழவைக்கும் உண்மை. கழகப் பொதுச்செயலாளர் கூற்றுப்படி அவர்கள் தனிவாழ்க்கை பொது வாழ்க்கை என்று எதையும் பிரித்துக்கொண்டது கிடையாது. அவருடைய வாழ்க்கை முழுவதுமே பொது வாழ்க்கை; தியாகத்தில் புடம் போட்ட பொதுவாழ்க்கை! அந்த வாழ்க்கையை 16.3.1978 முற்பகலோடு முடித்துக் கொண்டார் அம்மையார்.
ஆயினும், இயக்கத்தின் வாழ்வுக்கு முடிவே ஏற்படக் கூடாது என்பதில் உறுதி கொண்டிருந்த அம்மா, அதற்கான இன்றியமையாத ஏற்பாட்டைச் செய்துவிட்டுத்தான் போனார். “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிருவாக கமிட்டியின் ஆயுள் செயலாளராகிய நான் என்னுடைய ஆயுளுக்குப் பின்னால் திரு. கி. வீரமணி அவர்களைச் செயலாளராக நிருவாகித்து வர நியமனம் செய்கிறேன்” என அம்மா புரிந்த நல்லேற்பாட்டினால் இப்போது இயக்கம் வாழ்ந்து, எப்படிப் புதிய புதிய வரலாறுகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பார் பார்க்கிறது; பாராட்டுகிறது.
“அம்மையார் டிரஸ்ட் காரியத்தில் துரோகம் செய்யாது என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்னும் தந்தை பெரியாரின் நம்பிக்கைதான் எத்துணை துல்லியமான கணிப்பு!
உலக வரலாற்றில் அம்மா அவர்களுடன் ஒப்பிடுவதற்குரிய வீராங்கனையைக் காண்பதரிது.
வாழ்க அன்னை மணியம்மையார்!