‘தளபதி’ எனும் சிறப்புச் சொல்லால் அழைக்கப்பட்ட ‘அண்ணா’ என்னும் அண்ணாதுரை அவர்கள், சுயமரியாதை இயக்கத்திற்குச் செய்த தொண்டுகளை மதிப்பிட எந்த அளவு கருவியாலும் இயலாது.
திரு. நடராசன்-திருமதி. பங்காரு அம்மாள் ஆகியோரைப் பெற்றோராகப் பெற்ற அவர், 15.9.1909இல் காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
பள்ளியிலும், கல்லூரியிலும் பயிலும்போதே தன்மான இயக்கப் பற்று அண்ணாவின் உள்ளத்தில் வேர் விட்டு முளை காட்டத் தொடங்கியிருந்தது. சென்னையில் நிறுவப்பட்டிருந்த ‘சுயமரியாதை இளைஞர் மன்ற’த்தின் சொற்போர் கருத்தரங்குகளில் கலந்துகொண்ட அண்ணா தம் ‘பி. ஏ. (ஆனர்சு)’ தேர்வுகளை முடித்துவிட்ட நிலையில், 1936இல் திருப்பூரில் நடந்த ‘செங்குந்தர் வாலிபர் மாநாட்டில்’ அய்யா அண்ணா சந்திப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்தே தந்தை பெரியாரைத் தம் தலைவராக ஏற்றுக்கொண்டுவிட்டார் அண்ணா. பின்னர், ஆங்காங்கே நடந்த ‘தாலுகா ஜில்லா சுயமரியாதை மாநாடு’களிலும் இளைஞர் மன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தமது அறிவையும் திறனையும் காட்டி, ‘இளஞ்சிங்கம்’ எனும் பெருமையுற்றார்!
எனினும், அண்ணாவின் இணையில்லாச் சொல்லாற்றலை நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவும், இயக்க நடவடிக்கைகளில் அண்ணா தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுதற்கும் நல்வாய்ப்பாக அமைந்தது-அய்யா தொடங்கிய இந்தி எதிர்ப்பு அறப்போரே எனலாம். 1937இல் தமிழ் மாநில ஆட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற இராஜகோபாலாச்சாரியார் பள்ளிகளில் கட்டாய இந்தி மொழிப் படிப்பைப் புகுத்தியமை தமிழினத்தின் பல்வேறு தலைவர்களையும் ஒற்றுமைப்படுத்திற்று. மக்களை ஒன்றுபடுத்தித் திரட்டுவதில் அண்ணாவின் பங்கு பெரிதாகவிருந்தது, கிளர்ச்சி செய்யத் தூண்டிவிடுதல் என்னும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
1941இல் சுயமரியாதைக் கொள்கைகளை விளக்குவதற்காக வடநாட்டு நகரங்கட்குப் பயணம் செய்த அய்யா அவர்களுடன் சென்று மிக்க உதவியாகவிருந்தார்.
‘ரிவோல்ட்’, ‘விடுதலை’ ஆகியவற்றின் ஆசிரியப் பொறுப்பில் பணியாற்றிய அண்ணா, 1942இல் சொந்தமாகவே ‘திராவிடநாடு’ கிழமை இதழை முதல் நன்கொடையை அய்யாவிடம் பெற்றுத் தொடங்கினார். ஆங்கில இலக்கியங்களை ஆழமாகவும் அகலமாகவும் பயின்றதன் பயனாக அண்ணா அவர்களிடம், எந்த இந்திய தமிழ் எழுத்தாளர்க்கும் கைவரப்பெறாதவொரு புதுமையான நடை – பாணி குடிகொண்டது! அதைக் கையாண்டு ஆயிரக்கணக்கில் தன்மான விளக்கக் கட்டுரைகள் எழுதி, ஆரியத்தின் அடிவயிற்றைக் கலக்கினார்; மூட நம்பிக்கைகளின் முதுகெலும்பை நொறுக்கினார்; மானமற்ற தமிழர்க்குப் புதுக்குருதி புகுத்தினார்; ஈரோட்டுப் படைக்கு எண்ணற்ற இளைஞர்களைத் திரட்டினார்.
மொத்தத்தில் அய்யாவின் சுயமரியாதைத் தத்துவங்களின் விளக்கவுரையாளராக இயங்கினார் அண்ணா!
அய்யா அவர்களின் பொதுவாழ்வில் குறிப்பிடத்தக்க கட்டங்களில் ஒன்று 1944ஆம் ஆண்டில் நடந்த சேலம் மாநாடு. சுயமரியாதை பொங்கும், இழிவு அண்டாத இனப்பெயரான ‘திராவிடர்’ எனும் சொல்லிணைந்த ‘கழகம்’ எனத் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் எத்தனையோ தடைகளை உடைத்துப் புதிய வடிவங் கொண்ட பரபரப்பான மாநாடு அது! அதில், ‘அண்ணாதுரை தீர்மானம்’ என்ற பெயரால் தந்தை விரும்பிய ஒத்துழைப்பைத் தந்து, இயக்கத்தில் ஒரு சீரான சூழ்நிலையை நிலவ வைப்பதில் அண்ணா, அய்யாவுக்கு உற்ற தோழராக உதவினார்.
அதே காலத்தில் தமிழ்நாட்டு இசை மேடைகளில் தமிழ்ப் பாட்டுகள்தாம் இசைக்கப்பெற வேண்டும் என வற்புறுத்தும் தமிழிசை இயக்கம் அண்ணாமலை அரசரால் தோற்றுவிக்கப்பட்டது. தன்மானங் காக்கும் தமிழினத் தந்தை அதில் ஆர்வம் காட்ட, அண்ணா அவர்கள் நாட்டின் நகரங்களுக்கெல்லாம் சென்று தன்மானம் புகட்டுவதில் நல்ல பங்கேற்றார்.
ஆண்டவனைப் பற்றி அண்ணாவின் பேச்சுகளும், எழுத்துகளும் நூல்களாக வெளிவந்தன. நீண்ட பட்டியலாகும் அவற்றுள், “இலட்சிய வரலாறு”, “ஏ, தாழ்ந்த தமிழகமே”, “திராவிடர் நிலை”, “நாடும் ஏடும்”, “விடுதலைப் போர்”, “ஆரிய மாயை”, “கம்பரசம்”, “தீ பரவட்டும்”, “நல்ல தீர்ப்பு”, “தமிழரின் மறுமலர்ச்சி”, “புராண மதங்கள்”, “தேவலீலைகள்” ஆகியவை சுயமரியாதைக் கொள்கைகளின் தெளிவுரைகளே.
அவர் எழுதிய புதினங்களாகிய “ரங்கோன்ராதா”, “பார்வதி பி.ஏ.” – இவற்றின் கருவும் தன்மான இயக்கக் கோட்பாடுகளே!
அவரால் இயற்றப்பட்ட “சந்திரோதயம்”, “சந்திரமோகன்”, “வேலைக்காரி”, “நீதிதேவன் மயக்கம்” ஆகிய நாடகங்களின் அடிப்படையே-சுயமரியாதைத் தத்துவமாகிய அறிவும் மானமுமே. சில நாடகங்களில் அவரே பங்கெடுத்துச் சிறப்பாக நடித்தார்.
இந்த நிலைகளால் அண்ணா ஒரு பேரறிஞர் என்பதை ஆணவப் பார்ப்பனர் உள்பட அனைத்துலகும் ஒப்புக்கொண்டது!
1948இல் சென்னை மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்த காங்கிரசு முதல்வர் இந்தி மொழிக் கல்வியைத் திணித்ததால் வெடிக்க நேர்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு அய்யாவின் ஏற்பாட்டின்படி அண்ணா ‘சர்வாதிகாரி’யாகப் பொறுப்பேற்று நடத்தினார்.
அரசியல் ஈடுபாட்டை விழைந்த அண்ணா அவர்கள் 1949இல் அய்யாவை விட்டுப் பிரிந்து தனிக் கழகம் அமைத்த போதிலும், இறுதிவரை சுயமரியாதைச் சுடராகவே ஒளி வீசினார்.
1950இல் அண்ணாவின் “ஆரிய மாயை” நூலுக்குத். தடை போட்ட ஆட்சியினர், அண்ணாவிற்கும் ஆறுமாதச் சிறைத் தண்டனை அளித்தனர்.
1957ஆம் ஆண்டுக்கும், 1967க்கும் இடைப்பட்ட காலத்தில் சென்னை சட்டமன்றத்திலும், டில்லி மாநிலங்கள் அவையிலும் உறுப்பினராகவிருந்த அண்ணா அவர்கள், வாய்ப்புக் கிட்டிய போதெல்லாம் தம்மை ஒரு தன்மானக் கொள்கையினராகக் காட்டிக்கொள்ளத் தவறவேயில்லை.
1967இல் அண்ணாவின் அரசியல் கழகத்தை மக்கள் ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்ததும், தந்தை பெரியாரை நேரில் சந்தித்து, தாம் அய்யாவின் வழிகாட்டுதலிலேயே ஆட்சி நடத்துவதாக உறுதி சொன்னார். அவ்வண்ணமே பதவியேற்பு நிகழ்ச்சியின்போது முதல்வர் அண்ணாவும் அவரைச் சார்ந்த ஏனைய சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் ‘கடவுளின் பெயரால்’ என்னும் சொற்றொடரை விலக்கி உறுதியெடுத்தமை சுயமரியாதை மணம் பரப்புவதாக அமைந்தது.
ஆட்சிப் பொறியை இயக்கத் தொடங்கிய அண்ணா, ‘தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்டியதும், இந்திக் கல்வி என்றைக்கும் கிடையாது என்று ஆக்கியதும் தன்மானக் கொள்கைச் செயல்களேயன்றி வேறில்லை.
அரசு அலுவலகங்களில் இடம் தேடிக்கொண்ட கடவுளர் படங்களை அமைதியாக அகற்றிடவேண்டும் என்பதாக அண்ணா அவர்கள் இட்ட சுற்றறிக்கை, அவர் தம் குருதியிற் கரைந்தோடிய சுயமரியாதை உணர்வைப் பச்சையாக வெளிக்காட்டியது.
சுயமரியாதைத் திருமணங்களைச் செல்லுபடியாக்குவதற்கு அரும்பாடுபட்டு சட்ட ஏற்புக் கிட்டுமாறு அண்ணா செய்து, அய்யாவும் தன்மான இயக்கத்தவர் யாவரும் பெருமிதப்படப் பண்ணினார்!
அவர் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் மடல் வடிவத்தில் வரைந்த தொடர் எழுத்தோவியம் ‘வெள்ளை மாளிகையில்’ எனும் அரிய இலக்கியம். “நிறம், வடிவம், நாடு, மதம், மொழி, நிலை எப்படி எப்படி இருந்திடினும், மனிதன் மனிதன் தானே!” எனும் சுயமரியாதைக் கோட்பாட்டினை, “தில்லைத் தீட்சிதர் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார் என்று ஃபிரான்சு நாட்டிலே உள்ளவரிடம் சொன்னால் முழுப் பொருள் விளங்குமா?” எனும் ஆராய்ச்சி வினாவைக் கிளப்பி, தெளிவுரை பகன்று, நிலை நாட்டிய பேரறிஞர் அவர்கள், இறுதிவரை தம்மை இனங்காட்டிக் கொள்ளத் தவறவில்லை.
நாகரசம்பட்டியில் 19.12.1967 அன்று, பெரியார் இராமசாமி கல்வி நிலையத்தைத் திறந்துவைத்து, “பெரியார் அவர்கள் எடுத்துச் சொல்கிற கருத்துகளையும், கொள்கைகளையும் பரப்புவதற்கு, செயலாக்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன். சர்க்காரிலே இருந்து கொண்டு ஏதோ சில காரியங்களைச் செய்யவா? அல்லது விட்டுவிட்டு உங்களோடு வந்து தமிழகத்திலே இதே பேச்சைப் பேசிக்கொண்டு உங்களோடு இருக்கவா? – என்பதை முடிவு செய்யும் பொறுப்பை பெரியார் அவர்களுக்கே விட்டுவிடுகிறேன். அவர் ‘என்னோடு வந்து பணியாற்று’ என்றால் அதற்குத் தயாராக இருக்கின்றேன்’ என்பதாகத் தம் ஆர்வத்தை வெளியிட்ட அண்ணா அவர்கள், 12.7.1968இல் அரூரில் நடந்த தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில், “என்றைய தினம் நான் சுயமரியாதைக் கருத்துகளை ஏற்றுக்கொண்டேனோ, அன்றிலிருந்து இன்றுவரை நான் சுயமரியாதைக்காரனாகத்தான் நடந்துவருகிறேன்” என்று அணுவளவு அய்யத்திற்கும் இடம் வைக்காமல் பறைசாற்றினார்.
எனவே, அவனிபுகழ் அண்ணா அவர்கள் ஓர் அரசியற்காரர் என்பதைக் காட்டிலும், ஒரு சுயமரியாதைக்காரர் (ஆடிசந ய
ளுநடக-சுநளயீநஉவடிச வாயn ய ஞடிடவைiஉயைn) என்று முடிவு கட்டுதலே சாலப் பொருந்துவதாகும்.
3.2.1969 அன்று, சுயமரியாதைச் சுடரொளியாம் அண்ணா தம் மூச்சினை நிறுத்திக்கொண்டபோது தமிழினமே மூர்ச்சையானது!
தனயனைப் பிரிந்த தந்தை பெரியார், “அண்ணா அவர்கள் முடிவு எய்திவிட்டார். இந்த முடிவு தமிழ் நாட்டின் நான்கு கோடி மக்களை மாத்திரமல்லாமல், இந்தியா முழுவதிலுமுள்ள மக்களையும், இந்தியா மாத்திரமல்லாமல், உலகில் பல பாகத்திலுள்ள மக்களையும் பெரும் துக்கத்தில் மூழ்கடித்திருக்கும் முடிவாகும்!……. மனித வாழ்வில் வேறு யாருக்கும் கிடைக்க முடியாத பெருமையை அண்ணா அடைந்து விட்டார்!” என அறிவித்தது பொருள் பொதிந்த கருத்தன்றோ ?
பேரறிஞர் அண்ணா வாழ்க!