திருச்சி மாவட்டம், கட்டிபாளையத்தில், 31.3.1909இல் பிறந்த கணபதியவர்கள், தம் இருபத்தாறாம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளுடன் உறவேற்படுத்திக் கொண்டார்.
அந்தப் பகுதியில் இயக்க வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பெருந்தொண்டினால், இவர் கட்டிபாளையம் திராவிடர் கழகச் செயலாளராகவும், தவிட்டுப் பாளையம் திராவிடர் கழகச் செயலாளராகவும் பொறுப்பேற்றுப் பணியாற்றினார்.
மதுரைக் கருஞ்சட்டை மாநாட்டில் கலந்துகொண்ட இவர், பழமை வெறியர்களின் கடுந்தாக்குதலுக்கு இலக்காக நேரிட்டது. எனினும், இது இவர்தம் இயக்கப் பிடிப்புக்கு உரம் சேர்த்ததே தவிர, உறுதிகுலையச் செய்ய முடியவில்லை. கடவுள் மறுப்பு-ஜாதி ஒழிப்புப் போராட்டங்களில் பங்குகொண்ட இவரைச் சட்ட எரிப்புக் கிளர்ச்சியின் போது முன்கூட்டியே கைது செய்தது காவல் துறை. கைத்தறி நெசவாளர் போராட்டமொன்றில் ஈடுபட்டு இரண்டாண்டுகள் சிறை வாழ்வைச் சுவைத்த வீரர்!
கரூர் வட்டார மாநாடு தவிட்டுப்பாளையத்தில் நடத்திய பொறுப்பாளருள் ஒருவரான இவர், தீவிர இயக்கப் பேச்சாளர். அய்யா அவர்களின் இசைவோடு, 1945 முதல் “திராவிடர் திருமண ஒப்பந்தம்” என்னும் பதிவேடு வைத்து, 200க்கு மேற்பட்ட சுயமரியாதை மணங்களைத் தாமே முன்னின்று நடத்திப் பதிவு செய்த சிறப்புக்குரிய இவர், இயக்கத் தொடர்பு கொள்ளுதற்கு முன்னர் உச்சிக்குடுமி வைத்திருந்தவர்.
17.1.1965இல் இச்சுயமரியாதைச் சான்றோர் மறைவுற்றது நமக்குப் பேரிழப்பு.
வாழ்க கணபதி!