அணைக்கரை ‘டேப்’ தங்கராசு

  • திராவிடர் கழகத்தின் திருச்சி மாவட்டத் துணைச் செயலாளர், உடையார்பாளையம் வட்டத் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் அவர் சுமந்து முறையாக நிறைவேற்றினார்.
  • பல ஊர்களில் நடந்த இயக்க ஊர்வலங்களிலும் நாட்டையே குலுக்கிய இராவணலீலா விழாவிலும் இலங்கை வேந்தன் வேடம் புனைந்து திராவிடரின் சிந்தனையையும் தோள்களையும் பூரித்திடச் செய்தார்.
அணைக்கரை ‘டேப்’ தங்கராசு

அய்யா அவர்களின் சுயமரியாதைக் கருத்துகளை அன்றாடம் மக்களிடம் பரப்பிய கலைஞர்களில் ‘டேப்’ தங்கராசு அவர்கள் ஒருவராவார்.
‘டேப்’ என்னும் தாளக் கருவியின் துணையுடன் (‘தப்பு’ எனும் தோல் கருவியில் கையினாலேயே கவர்ச்சியாகத் தாளம் போடுதல்) எளிமையான பாடல்களைத் தாமே இயற்றித் தம் அழுத்தமான குரலில் இசைத்து இனவுணர்ச்சியலைகளைப் பரவவிட்டார்.

சாத்திரம் புராணப்படி சூத்திரர்களாயிருக்கும்
சங்கதியைச் சொல்வதெங்கள் வேலை, வேலை – இங்கு
சாதிகளில் லாதசமு தாயமும மைத்துக்கல்லுச்
சாமியை யுடைத்திடுவோம் நாளை, நாளை!”
கன்னிசாமி குருசாமிகள் அய்யப்பா-அங்கு
தண்ணி போட்டு ஆடாமலே செய்யப்பா!
உன்னைத் தேடி வருபவர்கள் அய்யப்பா – அங்கு
பெண்ணைத் தேடி அலையாமலே செய்யப்பா!”
என்பன அவர் பாடல்களின் சில வரிகள்.

திராவிடர் கழகத்தின் திருச்சி மாவட்டத் துணைச் செயலாளர், உடையார்பாளையம் வட்டத் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் அவர் சுமந்து முறையாக நிறைவேற்றினார்.
இயக்கத்தின் கட்டுப்பாடு சிலரால் மீறப்பட்டு இவரும் அவ்வாறு நடக்கத் தூண்டப்பெற்ற வேளைகளில் ஓர் உண்மையான படைவீரனாகக் கட்டுப்பாடு காத்த பெருமைக்கு உரியவரானார்,

அணைக்கரையில் தம் உறைவிடத்தின் சுவர்களில் அய்யா அவர்களின் தன்மானக் கருத்துரைகளை நிலையாகப் பொறித்து நல்ல பயன் விளைவித்தார்.
இயக்கம் நடத்திய போராட்டங்கள் பெரும்பாலானவற்றில் முன்னணிப் பங்கேற்றுப் பலமுறை சிறைப் பட்டவர்.

பல ஊர்களில் நடந்த இயக்க ஊர்வலங்களிலும் நாட்டையே குலுக்கிய இராவணலீலா விழாவிலும் இலங்கை வேந்தன் வேடம் புனைந்து திராவிடரின் சிந்தனையையும் தோள்களையும் பூரித்திடச் செய்தார்.

இறுதியாக இவர் தில்லையில் 13.08.1980 அன்று நடந்த பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டிற்கு உடல் நலிந்த நிலையிலும் கடமையுணர்வினால் உந்தப்பட்டு வந்து. இயக்கப் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கும் போதே உடல் நலக் கேடுற்று, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 27.08.1980 அன்று இயற்கை எய்தினார்.

இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட கழகப் பொதுச்செயலாளர் அவர்கள், “அய்யா என்னும் கடலில் விளைந்த ஆயிரக்கணக்கான நன்முத்துக்களில் ஒருவர். அவருடைய சாவு ஒரு களச்சாவு. அவருக்கு நினைவுச்சின்னம் நிறுவுவோம்” என்றார்.

‘டேப்’ தங்கராசு வாழ்க!

மேற்கண்ட சுயமரியாதைச்  சுடரொளியை குறித்து ஒளிப்படங்களோ, பிற தகவல்களோ உங்களிடம் இருப்பின் அதை அனுப்பி இப்பக்கத்தை மேம்படுத்த உதவுங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, viduthalai.editorial@gmail.com 

Share

Share on Facebook
Share on Twitter
Share on Whatsapp
Send by Email

உங்கள் வீர வணக்கத்தை செலுத்துங்கள்

Leave a comment